முள்ளும் மலரும் படத்தைப் பற்றி..

ரஜினி படங்களில் இன்று வரை பலர் ரசித்துப் பார்க்கும் படங்களில் முதல் இடம் முள்ளும் மலரும் படத்துக்குத் தான்..;

Update: 2023-03-07 04:00 GMT

பைல் படம்

எழுத்தாளர் உமாச்சந்திரன் (மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜனின் தந்தை) கதையை அடிப்படையாகக் கொண்டு யதார்த்த இயக்குநர் மகேந்திரன் எடுத்த படம்.

என்ன சொல்வது.. ஒரு காவியம் என்றா? ! பாசப் போராட்டம் என்றா? எளிய மக்களின் வாழ்க்கை என்றா? எல்லாம் சேர்ந்த கலவையாக மனதில் ஒட்டிக் கொண்டு நகரமாட்டாமல் இது வரை இருக்கும் படம். இதிலும் பாலுமகேந்திராவின் காமெரா கவிதை பாடும்.. நடிக்கும்.. காவியமாகும்.. தாலாட்டும்.. அந்த வின்ஞ் ஸ்டேசனும், மீன் குளமும் மனதை அள்ளிக் கொண்டு போகும்.

ரஜினி: காளியாகவே வாழ்ந்திருப்பார். அந்த வின்ஞ் ஸ்டேசஷனே தன்னுடையது என்று அவர் காட்டும் மிடுக்கும்.. தன் எளிய மக்களிடம் காட்டும் அன்பும், முரட்டுத்தனமான அடிதடி சண்டைக்கார ஆளாக இருந்தாலும், வள்ளி வள்ளி என்று தங்கை மீது காட்டும் பாசமும்,( மருதாணி வைத்து விடும் காட்சி) .

இரவானால் குடித்து விட்டு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்று பாட்டுப் பாடி, ஜாலியாக இருந்து, திடீரென மேலதிகாரியிடம் மோதி, வேலை போய், கை போய் தன் வேலைக்காக அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் நேரத்திலும்,  கெட்ட பய சார் இந்தக் காளி இரண்டு கை இல்லாட்டிக் கூட பிழச்சுக்குவான்  என்று வேதனையும், தைரியமாக டயலாக் பேசுவதும்.

தன் தங்கைக்கு ஏற்பாடு செய்யும் கல்யாணத்தை மனைவி உட்பட எல்லோரும் எதிர்க்கும் போதும், நம்பிக்கை இழக்காமல் தன் தங்கை தன்னை நாடி வருவாள் என்று எதிர்பார்த்து அவளும் அவர்கள் பக்கம் தான் என்று உணர்ந்து ஏமாற்றத்தை முகத்தில் காட்டி, தங்கை அப்படி அல்ல என்று காட்டி ஓடி வந்து தன்னைக் கட்டிக் கொள்ளும் தங்கையை அத்தனை பெருமிதத்துடன் வள்ளிடா! என் தங்கச்சிடா! என்று அவள் விரும்பும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து உறைந்து சிரிப்பாரே அதுவரை அவரின் ராஜ்ஜியம் தான்.

ஷோபா: இவரைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. நடிப்பு தான் இவர். இவர் தான் நடிப்பு. மூக்கைச் சுருக்கி சிரிப்பதாகட்டும், கை போய் வரும் அண்ணனை கட்டிக் கொண்டு கதறுவதாகட்டும், தான் செய்ய முடியாத வேலைகளைச் செய்ய ஒரு மனைவி வேண்டும் என்று தன் தோழியை கெஞ்சி மனைவியாக்குவதும், தன் அண்ணனுக்கு பிடிக்காதவரை காதலித்து, அனைவரின் வற்புறுத்தலுக்கும் இணங்கி எதிர்த்துக் கல்யாணம் செய்யப் போய், அண்ணன் தான் முக்கியம் என்று ஓடி வந்து கட்டிக் கொண்டு விக்கி அழுது, அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொல்லும் போது உறைந்து சிரிப்பாரே! அது வரை நடிப்பரசிதான்.. நடிப்புக்கு அரசி தான்..

அது போலவே படத்தின் படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு இருவரும் அருமையாக மங்கா, இஞ்சினீயராக அசத்தி இருப்பார்கள். அதுவும் படாபட் மீன் ஆய்வது போல இதுவரை யாரும் ஆய்ந்ததில்லை. கணவனிடம் காட்டும் வெக்கத்திலும்,  அதே கணவனை தன் தோழிக்காக எதிர்க்கும் நேரத்திலும் பிச்சு உதறுவார்.

இளையராஜா அவரைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. செந்தாழம்பூவில், தாலாட்டும் அடிப் பெண்ணேவில் மனதை வருடும் ராமன் ஆண்டானில் துன்ள வைக்கும்..நித்தம் நித்தம் நெல்லுச்சோறுவில் குழைந்து கொஞ்சும்.. பின்னணி இசை படம் நெடுக ராஜா ராஜா தான் என்று மயங்க வைக்கும்.. அதுவும் கடைசி காட்சியில் தட தடவென்று வேகமாக வரும் இசை சில நிமிடங்கள் அமைதியாகி, இது தான் மிக அழகான இசை என்று சொல்லும்.

இது அத்தனையும் சேர்த்து யதார்த்தமான அழியாத காவியமாக இன்றும் காளி, வள்ளி, மங்கா இஞ்சினியர் என்று வாழ வைத்த லெஜண்ட் மகேந்திரனை எவ்வளவு தான் பாராட்டுவது. துரதிர்ஷ்டவசமாக ஷோபா, படாபட் இரு அருமையான நடிகைகளும் நம்மிடம் இல்லை.

Tags:    

Similar News