கிணறு தோண்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்
போடிநாயக்கனூரில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண் சரிந்த விபத்தில் உயிரிழந்தார்;
போடியில் கிணறு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
போடி- மூணாறு மெயின் ரோட்டோரம் உள்ள விவசாய தரிசு நிலத்தில் இருந்த தனியாருக்கு சொந்தமான கிணறு மழையால் சேரும், சகதியுமாக இருந்தது. இந்த கிணற்றை சுத்தம் செய்ய பண்ணைத்தோப்பை சேர்ந்த மூன்று பேரும், பத்திரகாளிபுரத்தை சேர்ந்த நான்கு பேரும் வேலைக்கு வந்தனர்.
பண்ணைத்தோப்பை சேர்ந்த பெரியகருப்பன்( 40,), கனகராஜ்( 52,) பத்திரகாளிபுரத்தை சேர்ந்த உதயசூரியன்( 55 ) ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது படிக்கட்டுப்பகுதி சரிந்து இவர்கள் மீது விழுந்தது. இதில் பெரியகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உதயசூரியன் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் தப்பினர். இறந்த பெரியகருப்பனின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமலட்சுமி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.