முல்லைப்பெரியாற்றின் கரையில் பாதுகாப்பிற்கு நிற்கும் மீட்புப்படை
குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக முல்லைப்பெரியாற்று கரைகளில் மீட்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.;
தேனி மாவட்டம், குச்சனுாரில் சுயம்புவாக நிற்கும் சனீஸ்வரபகவான் கோயில் விழா நடந்து வருகிறது. இந்த விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். பலர் சுரபி நதியான முல்லையாற்றின் கிளை நதியில் குளிப்பது வழக்கம். சிலர் இங்குள்ள முல்லையாற்றில் குளிப்பது வழக்கம்.
தற்போது ஆற்றில் விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் மட்டும் தான் வருகிறது. அதாவது குறைந்த அளவு தண்ணீர் தான் வருகிறது. ஆனால் உள்ளூர் மணல் திருடர்கள் ஆற்றில் எந்த இடத்தில் மணல் திருடி ஆழம் ஏற்படுத்தி வைத்திருப்பார்கள் என்பது தெரியாது. தவிர ஆற்றில் சில இடங்களில் நீரின் ஓட்டத்தின் போது தானாகவே சில பள்ளங்கள், சுழல்கள் விழுந்திருக்கும். இந்த அபாயங்கள் அத்தனையும் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் மக்களுக்கும் தெரியாது.
இவர்கள் கவனக்குறைவாக பள்ளத்தில் இறங்கி நீருக்குள் மூழ்கி விடக்கூடாது என்பதற்காக, மக்கள் குளிக்கும் இடங்களில் தீயணைப்பு படையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான அத்தனை மீட்பு உபகரணங்களுடன் அதிகாலை 3 மணிக்கே ஆற்றின் கரைக்கு வந்து விடுகின்றனர். ஆமாம் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அதிகாலை 3 மணிக்கே குளிக்க ஆற்றில் இறங்குவது பெரிய அபாயம் தான். இரவு 10 மணி வரை காவலுக்கு நிற்கின்றனர். அவர்களை பொறுப்பாக வழிநடத்தி, பாதுகாப்பாக குளித்து கரையேற உதவுகின்றனர்.
யாராவது மூழ்கி விட்டால் உடனே மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக உள்ளனர். கோயில் திருவிழா நிறைவடையும் வரை இவர்களின் பாதுகாப்பு பணி நீடிக்கும். தீயணைப்பு படையினரின் இந்த முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை என பக்தர்கள் பாராட்டி வருகின்றனர்.