யானையிடம் சிக்கி தவித்த விவசாயி மீட்பு
யானையிடம் ஒண்ணரை மணி நேரம் சிக்கி தவித்த விவசாயி ஒருவரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.;
பைல் படம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் சிங்கு கண்டத்தை சேர்ந்த விவசாயி சஜி, 40. இவர் இப்பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்ற போது யானைக்கூட்டத்திடம் சிக்கினார். கூட்டத்தை சேர்ந்த ஒரு ஆண்யானை இவரை விரட்ட தொடங்கியது. தப்பி ஓடிய சஜி யூக்கலிப்டஸ் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
அந்த மரத்தடியில் புல் அதிகம் வளர்ந்து இருந்ததால், யானைகள் கூட்டமாக நின்று புல்லை சாப்பிட தொடங்கியது. மரத்தில் அமர்ந்திருந்த சஜி பயத்தில் அலற தொடங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் வந்தனர். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை வந்து பட்டாசுகள் வெடித்து யானைக் கூட்டத்தை விரட்டினர்.பின்னர் யூக்கலிப்டஸ் மரத்தில் இருந்த சஜியை மீட்டனர். இதற்குள் 1.30 மணி நேரம் கடந்து விட்டது. பயத்தில் உறைந்து போன சஜியை வனத்துறையினர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.