108 வயதில் 97 மார்க்: அசத்திய தமிழ்பாட்டி
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த 108 வயது பாட்டி தமிழ் தேர்வில் 97 மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளார்.
தமிழ் மொழினை இன்றைய தலைமுறை கற்றுள்ளதா இல்லையா என்பது தான் இன்று தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய விவாதமாக உள்ளது. மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பெருகி விட்டன. இதனால் தமிழ் வளம் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது என சிலர் காரணம் சொன்னாலும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் தமிழ் மொழியில் பின்தங்கி உள்ளனர். கல்லுாரியில் தமிழ் படிக்க சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துள்ளது. இப்படி ஒரு விவாதம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கையில், கேரளாவில் தள்ளாத வயதிலும் படிப்பின் மீதான ஆர்வத்தால் தேர்வு எழுதிய மூதாட்டி ஒருவர் தமிழ்பாடத்தில் 100க்கு 97 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். இந்த சுவாராஸ்யமான விஷயம் பற்றி பார்ப்போம்.
தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் கமலக்கன்னி, 108. இவர், பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் வண்டன்மேடு கிராமத்துக்குச் சென்றார். குடும்ப வறுமையின் காரணமாக, இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்தார். படிக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த கமலக்கன்னிக்கு, கேரள அரசின் 'சம்பூர்ணா சாக்ஷாத்' என்ற எழுத்தறிவு வகுப்பு வரப்பிரசாதமாக அமைந்தது.
இதில் இணைந்து படிக்கத் துவங்கிய இவர், தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார். சமீபத்தில் நடந்த தமிழ் எழுத்துத் தேர்வில், கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தான் பிறந்த மொழியான தமிழை எப்படி படித்தாரோ அதே அளவு தன்னை வாழ வைத்த மலையாளத்தையும் படித்து அதிக மார்க் வாங்கி உள்ளார். இவரை பாராட்டி, வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் கேடயம் வழங்கப்பட்டது. இந்த விஷயத்தை கேரள அரசு கொண்டாடி வருகிறது. கேரள அரசின் எழுத்தறிவு திட்டத்திற்கு இந்த கமலக்கன்னி மாபெரும் வெற்றியை தேடித்தந்துள்ளார் என என அதிகாரிகளும் கமலக்கன்னி பாட்டியை கொண்டாடி வருகின்றனர்.