தேனி மாவட்டத்தில் 513 வார்டுகளுக்கு 1960 பேர் போட்டி
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் 513 கவுன்சிலர் பதவிகளுக்கு 1960 பேர் களம் இறங்கி உள்ளனர்.;
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் ஆகிய ஆறு நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் 177 வார்டுகள் உள்ளன. இதில் சின்னமனுார் மற்றும் கூடலுார் நகராட்சிக்கு தலா ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 175 வார்டுகளுக்கு 799 பேர் போட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் குச்சனுாரில் ஒருவர், வடுகபட்டியில் நான்கு பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 331 வார்டுகளில் 1161 பேர் போட்டியிடுகின்றனர். ஆக மாவட்டம் முழுவதும் 513 கவுன்சிலர் பதவிகளுக்கு 1960 பேர் களம் இறங்குகின்றனர். இவர்களை தேர்வு செய்ய மொத்தம் 731 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு தேவையான மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சின்னம் அச்சிடும் பணிகள் நிறைவடைந்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணிகள் நடக்கிறது. ஓவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஓரு எஸ்.ஐ, இரண்டு போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.