55 மினி பஸ்கள் ஓடிய தேனியில் இன்று 4 மினி பஸ்கள் மட்டுமே இயக்கம்
55 மினி பஸ்கள் ஓடிய தேனியில் இன்று 4 மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதற்கு காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.;
தேனி நகராட்சியில் பல ஆயிரம் ஆட்டோக்கள், அதே எண்ணிக்கையில் மேக்ஸிகேப் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரம் டூ வீலர்கள், கார்கள், இதர வாகனங்கள் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள், அரசு பஸ்கள் என தேனி எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலில் அல்லோலகல்லோலப்படும்.
இதில் 55 மினி பஸ்கள் தேனி பழைய பஸ்ஸ்டாண்ட், நேரு சிலை சந்தில் இருந்து புறப்பட்டு சுற்றுக்கிராமங்களுக்கு இயங்கி வந்தது. இந்த பஸ்களை நிறுத்தக்கூட இடம் இல்லை.
எனவே தேனி பழைய பஸ்ஸ்டாண்டும், நேரு சிலையும் நெரிசலில் பரிதவிக்கும். விபத்துக்களும் சகஜமாக நடக்கும். முதல்வர் ஸ்டாலின் போட்ட ஒரே உத்தரவு அத்தனையும் ஓய்ந்து போனது. ஆமாம் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற உத்தரவு தான் அந்த உத்தரவு. ஒட்டுமொத்தமாக ஆட்டோ, மேக்ஸிகேப், மினி பஸ்கள் என அத்தனையும் காலியாகிப்போனது. ஆட்டோக்கள் ஸ்டாண்டுகளில் அமைதியாக நிற்கின்றன. மேக்ஸிகேப்களை பலர் பழைய இரும்பு கடைக்கு விற்க பேரம் பேசி வருகின்றனர். மினி பஸ்கள் இயக்குவதையே அதன் உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர்.
55 மினி பஸ்கள் இயக்கப்பட்ட தேனியில் இன்று நான்கு மினி பஸ்கள் மட்டுமே, அதுவும் ஏதோ பெயரளவிற்கு மட்டுமே இயங்கி வருகின்றன. பெண்கள் அரசு டவுன் பஸ்களை பெரும்பாலும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதுவே மினி பஸ்கள் அடிவாங்க முக்கிய காரணம். இப்போது எங்களுக்கு முன்பு இருந்ததை விட பணிச்சுமை குறைந்துள்ளது என போக்குவரத்து போலீசாரே பெருமிதத்துடன் கூறுகின்றனர்.