உசிலம்பட்டியை கடந்து செல்ல 4 மணி நேரம்: நெரிசலில் பக்தர்கள் தவிப்பு

மகாசிவராத்திரி சாமி கும்பிட சென்ற பக்தர்களின் வாகனங்களின் நெரிசல் காரணமாக உசிலம்பட்டியை கடந்து செல்ல 4 மணி நேரம் ஆனது.

Update: 2023-02-19 03:30 GMT

பைல் படம்

குலதெய்வங்கள் என்றாலே தென் மாவட்டங்கள் தான். மதுரையில் உசிலம்பட்டி பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை வழி நெடுகிலும், கிராமங்கள் தோறும் குல தெய்வ கோயி்ல்கள் உள்ளன. உசிலம்பட்டி சுற்றுக்கிராமங்களிலும், உசிலம்பட்டியில் இருந்து திருமங்கலம் செல்லும் வழியிலும் பல நுாறு குல தெய்வ கோயில்கள் உள்ளன.

அத்தனை கோயில்களிலும் மாசி மகாசிவராத்திரி அன்று ஒரு நாள் கட்டாயம் வழிபாடு நடத்தியே ஆக வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் ஒரே நாளில் பல லட்சம் பேர் புறப்படுவார்கள். தீபாவளி, தை பொங்கல் கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் குலதெய்வ கோயில்களுக்கு புறப்படும். இதில் ஒரு பகுதியினர் மட்டும் பஸ்களில் பயணிப்பார்கள். பெரும் பகுதியினர் தனி வாகனங்களில் பயணிப்பார்கள்.

இந்த வாகனங்கள் உசிலம்பட்டியை கடந்தே திருமங்கலம் வழித்தடம் வழியாக தென்மாவட்டங்களை நோக்கி பயணிக்கின்றன. இதனால் ஆண்டு தோறும் உசிலம்பட்டியில் வாகன நெரிசல் ஏற்படும். இந்த ஆண்டு ஏற்பட்ட நெரிசல் யாரும் எதிர்பாராதது. ஆமாம் நான்கு மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. உசிலம்பட்டியை கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் நான்கு மணி நேரம் நெரிசலில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டதால் பயணிகள் பரிதவித்துப் போயினர். அத்தனை பஸ்களின் நேர அட்டவணைகளும் மாறிப் போயின. போக்குவரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பஸ் பயணங்கள்  சாலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக  தாமதத்தை சந்திக்க நேரிட்டது..

நான்கு வழிச்சாலைகள் கடந்து செல்வதால் இதர மாவட்டங்கள் தப்பி விட்டன. மதுரை- உசிலம்பட்டி- தேனி மற்றும் உசிலம்பட்டி- திருமங்கலம் வழித்தடம் மட்டும் இதில் சிக்கிக் கொண்டது. இந்த சிக்கலை வரும் ஆண்டு மாசி மகாசிவராத்திரிக்கு முன்னர் சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது மதுரை- கொச்சி இடையே தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளுக்கு இடையே உசிலம்பட்டியில் பைபாஸ் சாலையை முன்னுரிமை அளித்து உடனடியாக அமைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News