மானியத்துடன் வீடு பெறுவதற்கு தேனி மாவட்டத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் மானியத்துடன் வீடு பெறுவதற்கு நான்கு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.

Update: 2022-07-19 10:27 GMT

அரசு அடுக்குமாடி குடியிருப்பு (பைல் படம்).

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை கோட்டம், தேனி மாவட்டத்தில் 1223 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடித்துள்ளது. மேலும் 1104 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளன.

இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அந்தந்த நகராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நகர்ப்புறத்தில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு மானியத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இதில் பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு முகாம் 20.07.2022 முதல் 23.07.2022 வரை நான்கு நாள் நடைபெறவுள்ளது.

தேனி தாலுகா அலுவலகம், சின்னமனுார், போடி, கூடலுார் நகராட்சி அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.பயனாளிகள் குடியிருக்கும் வீடுகளின் அளவு, இடத்திற்கு ஏற்ப 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வரை பங்குத்தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

விண்ணப்பதாரர் பெயரிலோ,குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ வேறெங்கும் வீடோ,வீட்டடி மனையோ இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.25,000/- ற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் மற்றும் மனைவி/கணவன் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கான சம்மதக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் முன் பணமாக வங்கி வரவோலையை"THE EXCUTIVE ENGINEER,TNUHDB,Madurai Division Madurai" என்ற பெயரில் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.*

மேற்கண்ட திட்ட பகுதிகளில் குடியிருப்பு வேண்டுவோர் விண்ணப்பிப்பதற்கு மேற்கண்ட சிறப்பு முகாம்கள் 20.07.2022 முதல் 23.07.2022 ஆகிய நான்கு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 05:30 மணி வரை நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News