92 காலிப்பணியிடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி

நடந்து முடிந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 92 பணியிடங்களுக்கு 3.22 லட்சம் பேர் எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2022-12-20 02:45 GMT

பைல் படம்

தமிழகத்தில் அரசுப்பணியிடங்களில் ஏறத்தாழ  4 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு அவ்வப்போது ஏதாவது ஒரு பணியிடத்திற்கான தேர்வினை அறிவித்து நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் ஒன் தேர்வு மூலம் நிரப்பப்படும் 92 பணியிடங்களுக்கு 3.22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

அதேபோல் போலீஸ் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் மிகப்பெரும்பாலா னோர் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மாஸ்டர் டிகிரி முடித்து குழந்தைகள் பெற்றுக் கொண்ட பலரும் இந்த தேர்வினை எழுதினர்.தற்போது வரை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அமர்ந்து குரூப் தேர்வுகள் உட்பட இதர அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களின் எண்ணிக்கையினை கணக்கிட்டால் தலை சுற்றுகிறது. இப்படி அரசுப்பணியிடங்களை நோக்கி அத்தனை பேரும் நகர்ந்து வரும் நிலையில், தமிழக அரசோ நிதிப்பற்றாக்குறையால் தடுமாறி வருகிறது.

ஏற்கனவே 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவர்களுக்கு உரிய சம்பள பணம் அரசுக்கு மீதமாகி வருகிறது. தவிர இந்த 4 லட்சம் பணியிடங்களில் சேருபவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் சேர்த்து தற்போது பணியில் இருப்பவர்கள் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அரசு ஊழியர்களிடம் பணிச்சுமை மிகவும் கடுமையாக அதிகரித்துள்ளது.

இவ்வளவு குழப்பங்களுக்கும் மத்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்போது வரை சம்பள உயர்வு, டி.ஏ., உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என கேட்டு போராடி வருகின்றனர். நேற்று பேசிய தமிழக கல்வி அமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வித்துறைக்கு அதி்களவு பணம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் 90 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்திற்கே சென்று விடுகிறது என கூறியிருந்தார். இதன் பொருள் தற்போது உள்ள சம்பள சுமையே அரசால் சமாளிக்க முடியாத அளவு உயர்ந்து விட்டது. இனிமேலும் சம்பள உயர்வினை அதிகம் எதிர்பார்க்காதீர்கள் என்பது தான் அடிப்படையில் அவர் சொல்ல வரும் விஷயம்.

இப்படி கடும் பணிச்சுமை, சம்பள உயர்விலும் போராட்டம் என்ற நிலையிலும், இப்போது ரேஷன் பணியாளர்கள் நியமனம் நடக்கிறது. இதற்கான ஒரு பணியிட விலை 6 லட்சம் முதல் எட்டு லட்சம் வரை சென்று விட்டது. சிலர் 12 லட்சம் ரூபாய் வரை கேட்டு வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.ஆக படித்தோ அல்லது பணம் கொடுத்தோ எப்படியாவது அரசு பணியினை வாங்கி விட வேண்டும் என்கிற துடிப்பே இன்றைய தமிழக இளம் தலைமுறையினரிடம் காணப்படுகிறது. இதற்கான காரணம் அதிர்ச்சியானது.

இன்றைய சூழலில் தமிழகத்தில் சிறு வியாபாரமோ, பெரிய வியாபாரமோ, சிறு தொழிலோ, பெரிய தொழிலோ செய்து பிழைப்பினை ஓட்டுவது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை தான். அந்த அளவு சிறு தொழில் மற்றும் வணிக துறைகளை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றி வருகின்றனர். அவர்களுடன் போட்டியிட்டு தொழிலிலும், வணிகத்திலும் வெற்றி பெறுவது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும்.

தவிர இன்று ஒரு அரசு ஊழியரின் வருமானம் சம்பளத்தை தவிர்த்து கணக்கிட்டால், பத்து தொழில் அதிபர்களுக்கு வரும் வருவாயும், ஒரு அரசு ஊழியருக்கு வரும் வருவாயும் சமம்  என்ற நிலை தான் காணப்படுகிறது. அந்த அளவு அரசு பணியில் சேர்ந்து விட்டால் வாழ்நாள் எல்லாம் மறைமுக வருவாய் கொட்டும். பின்னர் ஏன் நாம் தொழில் செய்து போராட வேண்டும் என்கிற மனநிலைக்கு இளம் தலைமுறையினர் வந்து விட்டனர். சம்பளம், கிம்பளம், நினைத்த அளவு விடுமுறை, அதிகாரம் என அனைத்தும் கிடைக்கும் அரசு வேலை தான் வேண்டும் என்கிற மனப்பக்குவத்திற்கு இளம் தலைமுறை வந்து விட்டனர்.

தனியார் நிறுவனங்களோ இன்று கொடுக்கும் சம்பளத்தை விட நான்கு மடங்கு வேலை வாங்குகின்றனர். இவ்வளவு வேலை தனியாரிடம் செய்வதை விட, அரசு அலுவலகங்களில் பணிக்கு சேர்ந்து வேலை செய்தால் செய்த வேலைக்கு கிடைப்பதை விட அதிக பணம் கிடைக்கும் என்கிற நினைப்பே இன்று அரசு தேர்வுகளில் உருவாகி உள்ள போட்டிக்கு காரணம் ஆகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News