முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கம்: பொதுப்பணித்துறை அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி இன்று அதிகாலை முதல் நீர் மட்டம் 142 அடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது

Update: 2021-11-30 02:22 GMT

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

முல்லை பெரியாறு அணையில் இன்று 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த அக்டோபர் 29ம் தேதி அதிக தண்ணீர் வந்தும் கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நீர் மட்டம் உயர்த்தப்பட்டு அதே ரூல்கர்வ் முறைப்படி இன்று நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை இன்று காலை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 2210 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டுள்ளது. மழை அதிகம் பெய்வதால் விநாடிக்கு  நீர் வரத்து அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. அப்படி கூடுதல் நீர் வரும் போது அந்த நீர் கேரளா பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் 142 அடியாக நிலைநிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில் இன்று மாலை 3 மணிக்கு லோயர்கேம்ப் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News