முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குங்கள்: விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டுமென ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது;
முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி 142 அடி தண்ணீர் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் இது குறித்து கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்க தற்போது ரூல்கர்வ் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையினை காரணம் காட்டி அணையில் 142 அடி நீர் தேக்க விடாமல் கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அதே ரூல்கர்வ் முறைப்படி அணையில் 142 அடி தேக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்நிலையில், கேரளா வழியாக வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு விட்டது. அணைக்கு தற்போது விநாடிக்கு 1797 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 556 கனஅடி நீர் தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை தொடரும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே இந்த ரூல்கர்வ் முறையினை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்குள் அத்துமீறி நுழைந்த கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், அதிகாரிகள் மீது, குமுளி தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.