13 மாநிலங்களில் 106 பேர் கைது: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் இன்று அதிகாலை 3.30 மணிமுதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சில மணிநேரத்தில் சோதனை நிறைவுபெற்றது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைதாகி இருக்கிறார்கள். கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களில் தலா 20 பேர் கைதாகி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமில் 9 பேர், உத்தரபிரதேசத்தில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைதான 106 பேரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.