எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
எஸ்.பி.ஐ. வங்கியின் ஸ்தாபன தினவிழாவை முன்னிட்டு தேனி கொடுவிலார்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
எஸ்.பி.ஐ., வங்கியின் 69வது ஆண்டு ஸ்தாபன நிறுவன தினத்தை முன்னிட்டு தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளை சார்பில் சமூக பொருளாதார நிதி மற்றும் டிஜிட்டல் மேம்பாடு சேவைக்கான விழிப்புணர்வு முகாம் கொடுவிலார்பட்டி கிராமத்தில் நடந்தது. தேனி எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளர் ரெங்கராஜன் வரவேற்றார்.
பிராந்திர மேலாளர் மதன் தலைமை வகித்தார். உதவி பொதுமேலாளர் ராமகிருஷ்ண கோலாகனி முன்னிலை வகித்தார். முதன்மை மேலாளர் (விற்பனைப்பிரிவு) சுப்பிரமணி, டெபுடி பிராஞ்ச் மேலாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். தேனி எஸ்.பி.ஐ., வங்கியின் சீனியர் அசோசியேட் மதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பயனாளிகளுக்கு தொழில் கடன், சைபர் பேலன்ஸ் வங்கி கணக்குகள், இலவச இன்சூரன்ஸ் சேவைகள் வழங்கப்பட்டன. எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் இரண்டு குடிநீர் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தும், கடன்களை வழங்கியும், பிராந்திய மேலாளர் மதன் பேசியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு வரை வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது சற்று சிரமம் நிறைந்த விஷயமாக இருந்தது. சேமிப்பு கணக்கு தொடங்க ஒரு நாள் முழுக்க ஆகி விடும். சில நேரங்களில் அதனை விட கூடுதல் நேரமும் செலவிட வேண்டியிருக்கும். அதுவும் சைபர் பேலன்ஸ் கணக்கு தொடங்குவது எட்டாக்கனியான விஷயமாக இருந்தது. தற்போது இந்த நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
வங்கி மக்களை தேடி வந்து சைபர் பேலன்ஸ்சில் கணக்கு தொடங்கி தருகிறது. இந்த வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு நலத்திட்டங்களை பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு வங்கி கணக்கு உதவும். வங்கி கணக்கு தொடங்க வயது முக்கியமில்லை. எந்த வயதினரும் தொடங்கலாம். ஆதார் கார்ட், பெர்த் சர்டிபிகேட் இருந்தாலே வங்கி கணக்கு தொடங்கி விட முடியும். இவ்வாறு பேசினார்.
டெபுடி பிராஞ்ச் மேலாளர் கார்த்தி பேசியதாவது: வங்கிகளில் மட்டுமல்லாமல், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் கணக்கு தொடங்கலாம். பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு பயன்பாடுகளுக்கும் வங்கி கணக்குகள் உதவும். தொழில் கடன், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு சேவைகளை வங்கிகள் வழங்குகிறது. மாணவ, மாணவிகள் படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பெறுவதற்கும் வங்கி கணக்கு உதவும். வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு பரிவர்த்தனை செய்ய வசதியாக இலவசமாக ஏ.டி.எம்., கார்டுகளும் வழங்கப்படுகின்றன.
ஒரு நாளைக்கு 2 ரூபாய் 70 பைசா செலவில் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் இழப்பீடு பெறும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு விபத்து, பாம்புக்கடி உட்பட இயற்கை மரணம் தவிர்த்த பிற மரணங்கள் ஏற்பட்டால் இந்த 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்கப்படும். அந்த குடும்பம் பாதிப்பில் இருந்து தப்ப முடியும். தவிர பல அற்புதமான சேமிப்பு திட்டங்களும் வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. இவ்வாறு பேசினார்.