இந்தியாவின் பொருளாதார வேகம்: அமெரிக்காவின் தீடீர் பாசம்

கொஞ்ச நாட்கள் முன்பே அமெரிக்க அரசும் அதன் இரு கட்சிகளும் நமது நாட்டுடனும் மோடி அரசுடனும் ஒரு சமரசத்திற்கு வந்து விட்டன.;

Update: 2023-06-25 09:15 GMT

அது சமரசமா, தீடீர்ப்பாசமா அல்லது நமது பொருளாதார வளர்ச்சியிலே இருந்து விலகி விடாமல் இருக்க அமெரிக்கா துண்டு போட்டு இடம் பிடிக்கிறதா என்பது நமது பாரதபிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும். கணினி சில்லுகளின் உற்பத்தியிலே இந்தியாவுக்கு உதவுகிறோம் என சொல்வதாகட்டும் இந்திய அமெரிக்க உறவுக்கு வானமே எல்லை என பேசுவதாகட்டும் அஜீத் டோவலை புகழ்ந்து தள்ளுவதாகட்டும் ஒரு தாலாட்டு பாராட்டு மழையாக இருக்கிறது.

சும்மா உற்பத்தி உள்கட்டமைப்பு என பேசிக்கொண்டிருக்காமல் கணினி சில்லுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது, குவாண்டம் கொள்கை, புதியவகை செயற்கைக்கோள்கள், ஏவுகணைகள் என இந்தியா வளர்ந்து வருவது புதிய வழிமுறை. அதி நவீன தொழில்நுட்பங்கள் ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும், பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு கச்சா எண்ணெய் எனப்படும் பெட்ரோலிய சுத்திகரிப்பு முறையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தொழில்நுட்பம் மற்றும் முறைகளிலே உலகளாவிய அளவிலே மூன்றாம் இடத்திலே இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா நாடு தான் அதிகளவிலே பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் அதன் முறைகளிலே நவீனமாக இருக்கிறது.

எந்தளவுக்கு என்றால் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவிலே இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வந்து இங்கே சுத்திகரித்து பின்பு மற்ற நாடுகளுக்கு விற்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. ரஷ்ய கச்சா எண்ணையை சல்லிசாக வாங்கி சுத்திகரித்து டீசல், பெட்ரோல் என எடுத்து திரும்பவும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகவிலைக்கு விற்று காசு பார்க்கும் அளவுக்கு இந்தியா வளர்ந்து விட்டது.

நவீன உலகத்தின் முதுகெலும்பான நாடி நரம்பான கணினி சிப் -கள் தயாரிப்பிலே முழுமையாக வெற்றி கண்டால்? அது தான் இவ்வளவு பாசத்திற்கும் உருட்டுக்கும் காரணம். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவிட் தொற்று உச்சத்திலே இருக்கும் போது பாரதப்பிரதமர் மோடி ஆத்மநிர்பார் எனும் உற்பத்தியிலே தன்னிறைவு கொள்கையை அறிவித்தார். அதிலே உற்பத்தியை பொறுத்து சலுகைகள் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது.

துணிகள் அதாங்க டெக்ஸ்டைல்ஸ் துறையிலே ஆரம்பித்து பல பத்து துறைகளுக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. மொபைல் போன்கள், கனரக எந்திரங்கள், மின்சார வாகனங்கள் என பலதுறைகளிலே பல லட்சம் கோடிகளுக்கு புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதிலே மிக முக்கியமான ஒன்று கணினி சில்லுகளை அதாங்க கம்ப்யூட்டர் சிப் களை இங்கேயே தயாரிக்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பலரும் கேலி பேசினார்கள். உலகமே 3 நானோமீட்டர் சில்லுகளை தயாரித்துக்கொண்டிருக்கிறது நீ என்ன 100 நானோமீட்டர் சில்லுகளுக்கு உற்பத்தி தொழிற்சாலை அமைக்கிறாய் என பலரும் கிண்டல் செய்தனர். இதற்கு மின்னனுவியல் அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் சின்னக்குழந்தைக்கு புரியும் படியாக புளிப்போட்டு விளக்கினார்.

3 நானோமிட்டர் சில்லுகள் எல்லாம் மொபைல்போன் மற்றும் கணினிகளுக்கு தான். ஆனால் நீங்கள் ஓட்டும் கார், பைக், லாரி என ஆரம்பித்து ஏசி, பிரிட்ஜ், வாஷிங்க்மெஷின் என எல்லா இடங்களிலேயும் தேவைப்படுவது 100 நானோமீட்டர், 50 நானோமீட்டர் போன்ற சில்லுகள் தான். அது தான் தயாரிக்கப்படும் சில்லுகளிலே 80 சதத்திற்கும் மேல் இருக்கிறது. முதலிலே அதை ஆரம்பித்தாலே ஒரு சில வருடங்களிலே நவீன சில்லுகள் தயாரிக்கும் திறன் பெற்றுவிடலாம் என சொன்னார். இந்த இடத்திலே கவனிக்கவேண்டியது உலகளாவிய அளவிலே இருக்கும் கணினி சில்லுகள் தயாரிப்பு நிபுணர்கள், பொறியாளர்களிலே இந்தியர்கள் 20 சதம் பேர் உள்ளனர். சீனாவுக்கு கூட இல்லாத திறன் இது. நம்மிடம் பணம் இருக்கிறது, பொறியாளர்கள் இருக்கிறார்கள், திறன் இருக்கிறது. ஆனால் இதுவரை அரசியல் பலம் இல்லை. அரசிலே இருந்தவர்கள் இப்படி யோசிக்கவில்லை. இறக்குமதி செய்து கொள்வோம் அதிலே எவ்வளவு கமிசன் என்று தான் பார்த்தார்கள். முதன்முதலாக நாமும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவோம் என ஆரம்பித்திருக்கிறோம்.

இதிலே இன்னும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறன என ஊகிக்கிறேன். அதிலே கொஞ்சம் அமெரிக்காவிடம் காட்டப்பட்டு இருக்க வேண்டும். இல்லையேல் அதிமுக்கிய மற்றும் புதிய தொழில்நுட்பங்களிலே ஒத்துழைப்போம் என அமெரிக்கா தீடீர்ப்பாசத்தோடு உருகவேண்டிய அவசியமில்லை. அதிமுக்கிய மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் தொடக்கம் எனும் ஒப்பந்தத்திலே இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்து போட்டிருக்கிறது. இதை இறுதி செய்தவர் அஜீத் டோவல். பாதுகாப்பு ஆலோசகருக்கும் தொழில்நுட்பத்துக்கு என்ன சம்பந்தம் என கேட்கலாம். பாதுகாப்பு விஷயங்களை உள்ளடக்கிய அல்லது மிகவும் ரகசியமான தொழில்நுட்பங்கள் என புரிந்து கொள்ள வேண்டும். இங்கே அதற்கான ஒரு விவாதம் நடந்த போது கலந்து கொண்டது ஜேக் சுலிவன் எனும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரும் அஜீத் டோவலும் தான். ஜேக் சுலிவன் இங்கே வந்தபோது பேசியது அனைத்துமே எப்படி புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது பயன்படுத்துவது என்று தான். இதை என்னாவோ சீனாவுக்கு எதிரான நிலை உருட்டுகிறார்கள். ஆனால் வெறுமனே சீனாவுக்கு எதிரானது என்றால் மட்டும் இப்படி கெடந்து பொரளவேண்டிய அவசியமில்லை.

ஒரே காரணம் தான். பாரத பொருளாதரம் எட்டுக்கால் பாய்ச்சலிலே வளரும். கூட அமெரிக்கா சேர்ந்து கொண்டால் அமெரிக்காவுக்கு நல்லது. இல்லையேல் இந்தியாவுக்கு நஷ்டம் ஏதுமில்லை என்பது தான். இப்படியா பாரதம் வளர்கிறதே அதுவும் மோடியின் ஆட்சியின் கீழ் வளர்கிறதே மர்மமான பேர் வைக்காத ஆட்களுக்கு எரிகிறது.

எனவே இதை தடுக்க, நிறுத்த என்ன செய்ய முடிந்தாலும் செய்வோம் என இறங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவிலே போராட்டம், கடிதாசு என 57 கீழவை உறுப்பினர்களும் 18 மேலவை உறுப்பினர்களும் சேர்ந்து உருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்க பொதுமக்கள் பாரதம் வளர்வதை வரவேற்கிறார்கள். ஜனநாயகம், மக்களாட்சி போன்றவற்றிலே நிலைநிற்கும் ஒரு நாடு வளர்வது என்பது பிடித்தமானது தானே? பாரதம் வளர்வது உலகின் பொருளாதார நிலையையே மாற்றும் என ஜேக் சுலிவன் சொன்னது தான் இங்கே பார்க்க வேண்டியது.

இந்த இடத்திலே மேற்கு ஆசியா அதாங்க வளைகுடா நாடுகள், கிழக்கு ஆசியா அதான் மியான்மரிலே ஆரம்பித்து இந்தோனேசியா வரை என நடக்கும் விஷயங்களை பாரதம் செய்யும் விஷயங்களை தனியாக பார்க்கவேண்டும்.

இரு நாட்களுக்கு முன்பு உள்நாட்டிலே கட்டப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை வியட்நாமிற்கு பாரதம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீனாவின் ஊருடுவலை வியட்நாம் எதிர்கொண்டிருக்கும்போது செய்யும் வேலை இது. அடுத்து பிரமாஸ் ஏவுகணைகள் வியட்நாமிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் வழங்கப்படும் என சொல்கிறார்கள்.

மிகப்பிரமாண்ட சதுரங்கத்திலே மிக சாதுர்யமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஆட்டம் கலைக்கப்படாமல் இருக்க மோடி இன்னும் பத்தாண்டுகளுக்கு பிரதமராக இருக்க வேண்டும். பாஜக இன்னும் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு ஆட்சியிலே இருக்க வேண்டும்.

Tags:    

Similar News