மதுக்கூர் வட்ட சிராங்குடியில் கிராம மேலாண்மை குழு கூட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம் சிராங்குடியில் கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் இந்தாண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிராங்குடி பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது .
இத்திட்டத்தின்கீழ் வேளாண்மை துறை உள்ளிட்ட 16 துறைகளை ஒருங்கிணைத்து தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துக்களின் முன்னேற்றத்துக்கான அனைத்து வழிகளையும் செயல்படுத்தும். பஞ்சாயத்துக்களின் முன்னேற்றத்திற்கு துறைகளை ஒருங்கிணைப்பதை வேளாண்மை உதவி அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படுவார்.
அனைத்து துறைகளும் தங்களது திட்டங்களில் தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்துக்களில் அதிக முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், கிராமத்து விவசாயிகள் தன்னிறைவு அடையத் தக்க வகையிலும் விவசாயிகளின் தேவையறிந்து பணியாற்ற முனைப்புடன் செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தங்களை குறித்த அனைத்து அடிப்படை விபரங்களையும், பஞ்சாயத்து அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் தங்களது புகைப்பட நகல், நில விபரம், ஆதார் கார்டு நகல், வங்கி புத்தக நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் விவரங்கள் மென்நகலாக தொகுக்கப்பட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் பகிரப்படுகிறது. எனவே அனைத்து துறைகளும் தங்களது திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். எனவே விடுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் தங்கள் விபரங்களை பதிவு செய்து தங்களுடைய முன்னேற்றத்துக்கும் பஞ்சாயத்தின் முன்னேற்றத்துக்கும் தேவையான கருத்துக்களையும் கூட்டங்களில் தெரிவித்து பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சிராங்குடி பஞ்சாயத்தில் சிராங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிராங்குடி மேலாண்மை குழு கூட்டம் வேளாண்மை அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் தேவைகளை பதிவு செய்து அடிப்படை விவரங்கள் பதிவிற்கான படிவத்தையும் பெற்றுச் சென்றனர்.
இக்கூட்டத்தில் சிராங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கிருபாகரன் முன்னிலை வகிக்க, துணைத் தலைவர் முருகேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வளர்மதி விஜயலட்சுமி ஆகியோரின் கருத்துரையுடன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வேளாண் அலுவலர் சாந்தி விளக்கிக் கூறினார்.
வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பிற துறைகளின் மூலம் கிடைக்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்தும் கலந்துகொண்ட விவசாய உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் அனைத்து விவசாயிகளும் விடுபாடு இன்றி தங்கள் தகவல்களை உரிய ஆவணங்களுடன் பதிவுசெய்து பயன் பெற கேட்டுக்கொண்டார் .