கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பராமரிப்பு பணிகளை பார்வைியிட்டு ஆய்வு
தஞ்சை மாவட்டம் கல்லணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தஞ்சை மாவட்டம் கல்லணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து புனரமைப்பு பணிகள் குறித்து அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை முதலமைச்சர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் அங்கு ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் டெல்டாவில் 647 பணிகள், 4,061 கி.மீட்டர் நீளத்தில் ரூ.65 கோடியே 10 லட்சத்தி 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதைக் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி, நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோரிடம் கலந்தாலோசித்தார்.
இம்முறை கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கு உரிய வகையில் பணிகள் நடைபெற வேண்டும். கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் சேரவில்லை என யாரும் குறை சொல்ல முடியாத வகையில் பணிகள் இருக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.