தஞ்சை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
தஞ்சை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை போலீஸ் எஸ்.பி பாராட்டினார்.;
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கடந்த 4ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு 5ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இக்குழந்தையை 6ம் தேதி அதிகாலை ஒரு பெண் கட்டைப் பையில் வைத்து கடத்திச் சென்றார்.
குழந்தை கடத்தல் தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட போலீஸ் எஸ்பி ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் குழந்தையை பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜி என்கிற பெண் கடத்தி சென்றது தெரியவந்தது.
போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை கைது செய்து பச்சிளம்குழந்தையை மீட்டனர். விசாரணையில் தனது மூன்றாவது கணவனுக்கு இக்குழந்தையைக் காட்டி சொத்துகளைப் பெறுவதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அக்குழந்தையை அவரது பெற்றோரிடம் போலீசார் இன்று மாலை ஒப்படைத்தனர்.