மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் தேனி பெட்டிகள்

Daily Agriculture News- மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு தேனி பெட்டிகளை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழங்கினார்.

Update: 2022-08-02 06:48 GMT

மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு தேனி பெட்டிகளை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழங்கினார்.

Daily Agriculture News- மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகள் 10 பேர் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஒரு தேனிப்பெட்டி ரூ.4000 விலையில் காரப்பங்காடு மதுரபாசனிபுரம் விக்ரமம் மூத்தாகுறிச்சி மன்னாங்காடு மற்றும் ஆலத்தூர் பஞ்சாயத்து சேர்ந்த ஒரு விவசாயி வீதம் வழங்கப்பட்டது.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பின் மூலம் அதிக காய்ப்பிடிப்பை ஏற்படுத்தவும் தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் தேனீ பெட்டி வழங்கப்படுகிறது. ஒரு தேனிப்பட்டி ரூ.4000 விலையில் விவசாயி வாங்கிய பின் விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக அவருடைய வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படுகிறது.

தேனிப்பெட்டி செயல் விளக்கத்தின் கீழ் பெறப்பட்ட தேனி பெட்டிகள் ஆறு அடுக்குகளுடன் மற்றும் ராணி தேனீயுடன் குறைந்த எடை உடைய மரங்களான புன்னை வேங்கை மற்றும் பலா மரங்களில் செய்யப்படுகிறது. தேனி பெட்டிகள் பெற்றுக் கொண்டுள்ள விவசாயிகள் நிழல் உள்ள இடங்களில் அதிக மழை மேலே படாதவாறு எறும்புகள் மேல ஏறாத வண்ணம் தேனீ பெட்டி வைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட்களின் கால்கள் நீர் உள்ள கலன்களில் இருக்குமாறு பராமரித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நம்மைப் போலவே தேனீக்களும் நீர் அருந்தும் தன்மை உடையது. அதற்கு தேனீ பெட்டிகளுக்கு அருகில் மூன்று குச்சிகளை வீ வடிவில் நட்டு அதில் ஒரு பெரிய கொட்டாங்குச்சியை வைத்து அதில் நீரை ஊற்றி வைக்கவும் தேனீக்கள் அமர்ந்து நீர் குடிக்கும் வகையில் மிதக்கும் சிறு சிறு குச்சிகளை அந்த தண்ணீரில் போட்டு வைத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு சூரியன் மறையும் வரை மலர்களை நோக்கி சென்று வந்து கொண்டே இருக்கும். இதனால் மகரந்த சேர்க்கை அதிகமாகி தரமான உற்பத்தியும் அதிக தேன் உற்பத்தியும் நமக்கு கிடைக்கிறது. தென்னை உற்பத்தி குறைவாக உள்ள இடங்களில் தேனீ பெட்டிகளை வைத்து அதன் வித்தியாசத்தை உணரலாம். ஆறு சட்டம் உள்ள பெட்டிகள் பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு தேனீக்கள் அதிகளவில் தேனை சேகரிக்கும். மூன்று மூன்று முதல் ஆறு மாத காலத்தில் வளர்ந்து அடுக்குகள் முழுமை அடைந்து விடும். இதன் மூலம் தோப்புகளில் இன்னும் அதிக தேனீ பெட்டிகளை வைத்து தேனீக்களின் எண்ணிக்கையை நாம் அதிகரித்துக் கொள்ளலாம்.

30 சதவீதம் வரை தேங்காய் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கிறது .தேனும் நமக்கு ஒரு கூடுதல் வருவாய் .எனவே விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த விபரங்களை தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு முறையான பராமரிப்பால் தேனீ வளர்ப்பில் முன்னேறலாம் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.

தேனி பெட்டிகள் இரவு நேரங்களில் மட்டுமே வழங்கத் தகுந்தவை எனவே விவசாயிகளுக்கு இரவு 7.30 மணிக்கு மேல் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், சுரேஷ், தினேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி மற்றும் ராஜு ஆகியோர் தேனிபபெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தேனிப்பெட்டி பெற்றுக் கொண்ட விவசாயிகள் அரசு 50% மானியத்தில் இன்னும் அதிக அளவில் தேனி பெட்டிகளை விவசாயிக்கு வழங்கிட கேட்டுக் கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News