இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று

இயற்கை அறிவியலில் கவனம் செலுத்தி, தன் இறுதி மூச்சு வரை அதற்காக பாடுபட்டவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்;

Update: 2022-04-06 07:08 GMT

1938 ஆண்டு இதே நாளில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த இவர் ஒரு பட்டதாரி. ஜப்பானிய விவசாயி மசனோபு ஃபுக்குவோக்கா என்பவரால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலில் கவனம் செலுத்தி, தன் இறுதி மூச்சு வரை அதற்காக பாடுபட்டவர்.

ஒத்தநாடி உடம்பு, ஆயுள் முடிய போகும் காலம் என இந்த மனிதன் களப்பணியிலேயே கனவு கண்டு கொண்டிருந்தார். உறங்கவே இல்லை. 'உண்மை உங்களை உறங்க விடாது. அதற்கு பெயர்தான் உண்மை. நாளைய உலகம் நம்மை கட்டாயம் நம்பும்' என அவர் உறுதியோடு நின்றார். அதன் விளைவுதான் இன்று மக்கள் இயற்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். நிலம் பற்றிய கவலை உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நம்மாழ்வார் வாழ்கிறார்.

நம்மாழ்வாரின் குரலும், கருத்தும், முயற்சியுமே இன்றைய, நாளைய தேவையாகவும் இருக்கிறது. விவசாயம் என்றால் உரச்சத்து, ஊட்டச்சத்து என்ற பெயரில் பயிரை நஞ்சாக்கியது போகாமல் நிலத்தையும் நாசமாக்கி கொண்டிருந்தார்கள் படித்த விஞ்ஞானிகள். இவர்தான் உரங்களை உதறித்தள்ளிவிட்டு இயற்கைக்குத் திரும்பச் சொல்லி அறைகூவல் விடுத்தார். இலைத்தழைகளை போட்டு இயற்கையை விளைவிக்க முடியும் என எடுத்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

நம் நாட்டு வேப்பிலைக்கு காப்புரிமை வாங்கி வைத்திருந்தது பன்னாட்டு நிறுவனம். அதை அறிந்த இவர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார். வெற்றி நம்மாழ்வார் வீட்டுக்கதவை தட்டியது. நமது வேம்பை மீட்டுக் கொண்டுவந்தார், இந்த மனிதர். இயற்கை விவசாயம் என்பதை உயிர் மூச்சு பிரியும் வரை இறுக பிடித்துக் கொண்டிருந்தது இவரது நெஞ்சு.

Tags:    

Similar News