மண் வளம் காப்பதில் கொழிஞ்சி முதலிடம்: வேளாண் உதவி இயக்குனர் தகவல்

மண் வளம் காப்பதில் கொழிஞ்சி முதலிடத்தில் உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-13 13:21 GMT

கன்னியாகுறிச்சி நடைபெற்ற உழவர் வயல்வெளிப் பள்ளி.

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் அருகே உள்ள கன்னியாகுறிச்சி உழவர் வயல்வெளிப் பள்ளி நடைபெற்றது. இதில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கலந்துகொண்டு பேசியதாவது:

டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடி வயல்களில் மண் வளம் காப்பதில் கொழிஞ்சி முதலிடம் பிடிக்கிறது. மண்ணின் வெப்பத்தை குறைக்கவும் மண்வளத்தை கூட்டவும் கொழிஞ்சி பயிரானது பசுந்தாள் உர பயிராக விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கடும் வெப்பத்தை தாங்கும் நீர் அதிகம் தேவையில்லை பூச்சி நோய் தாக்குதல் மிக குறைவாக இருக்கும் சணப்பு தக்கை பூண்டு போன்ற பயிர்கள் கடும் வெப்பத்தை தாங்காது.

மேலும் 45 நாட்களில் பூ பூத்தவுடன் உடனடியாக மடக்கி உழவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டு கெட்டியாகி அதிக நார்த்தன்மையுடன் இருப்பதால் மக்காமல் நிலத்தில் அதிக நாள் இருந்து மண்ணின் வெப்பத்தையும் அதிகரிக்கும். ஆனால் கொழிஞ்சி எத்தனை நாள் நிலத்தில் விட்டு வைத்திருந்தாலும் எளிதில் மடக்கி உழ முடியும். வளரும் காலத்தில் மூடாக்காகவும் மடக்கி உழுதபின் சிறந்த உரமாகவும் பயிருக்கு உதவியாய் உள்ளது.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிடவும். தாளடி உளுந்து ஏக்கருக்கு எட்டு கிலோ அறுவடைக்கு ஏழு நாளைக்கு முன் தெளிக்கும்போது 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் பத்து மணி நேரம் நீரில் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும் நெல் அறுவடை செய்த பின் அதிக நீர் தேவை இன்றி உளுந்தும் கொளுஞ்சியும் நன்றாய் வளரும். 75 நாளில் உளுந்தை அறுவடை செய்த பின் அடுத்த போக நெல் சாகுபடிக்கு 15 நாட்களுக்கு முன் நிலத்துக்கு நீர் பாய்ச்சி கொளுஞ்சியை மடக்கி உழுது விடவேண்டும்.

குறிஞ்சியில் தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து மூன்றும் இருக்கும் குறிப்பாக நெல் சாகுபடியில் யூரியாவின் பயன்பாட்டை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. நெல் பயிருக்கு மட்டுமின்றி. தென்னந்தோப்புகளிலும் கொழிஞ்சி விதைத்து நிரந்தரமாக வைப்பது அதிகளவு தேனீக்களை ஈர்க்கும் தன்மை உடையது.

தென்னந்தோப்புகளில் இதனால் காய் பிடிப்பு தன்மையும் அதிகரிக்கும். நீர்வளம் குறைந்த விருதுநகர் ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நீர் குறைந்த தரிசு நிலங்களில் தென்னை வளர்க்கும் பொழுது ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் கருவாட்டுத் தூசியை அரை கிலோ 10 கிலோ கொழிஞ்சி இலைகள் மற்றும் 2 கிலோ உப்பினை கலந்து ஒவ்வொரு மரத்திற்கும் இரண்டு அடி ஆழ காண்பறித்து விடுவதன் மூலம் தென்னையில் பூக்கள் மற்றும் காய் பிடிக்கும் தன்மை அதிகரிக்கிறது.

மழை பெய்தவுடன் விவசாயிகள் தென்னந்தோப்புகளில் இத்தகைய உரமிடும் முறைகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உரமிடும் செலவு குறைவதோடு மண்ணின் கட்டமைப்பு மாறும். மண்ணின் பௌதீக பண்புகளும் மாறும். எனவே விவசாயிகள் சாகுபடி ஏற்ற நேரங்களில் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் கொழிஞ்சி செடிகளில் இருந்து விதைகளை சேகரித்து ஏக்கருக்கு 5 கிலோ விதம் சாகுபடி செய்ய வயல்களில் தூவி 65லிருந்து 70 நாட்கள் கழித்து வளர்ந்த செடிகளை அப்படியே மடக்கி உழவு செய்யலாம் பத்து நாள் கழித்து விருப்பப்பட்ட பயிரின் விதைகளை நடலாம். மூணு மூட்டை யூரியா தரும் சத்தை ஒரு ஏக்கர் சாகுபடி செய்யும் பசுந்தால் உரம் தருகிறது.

மதுக்கூர் வட்டாரத்தில் பெரிய கோட்டை வெட்டிக்காடு அண்டமி போன்ற பகுதிகளில் இயற்கையாக அபரிமிதமாய் வளர்ந்து இருக்கும் கொழிஞ்சி செடிகளில் காணப்படும் அதீதமான தேனீக்களே இதற்கு சாட்சி. மண் வளமாய் இருப்பதற்கு தானாய் வளரும் கொளுஞ்சியும் ஒரு சாட்சி. எனவே விவசாயிகள் கொழிஞ்சி சாகுபடி மேற்கொண்டு உர செலவு குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்தகு பயிற்சிகள் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கன்னியாகுறிச்சி பஞ்சாயத்தில் வேளாண் உதவி அலுவலர் தினேஷ் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு 25 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயிகள் தற்சார்பு அடைய வேண்டும் என்ற நோக்கில் தாங்களாவே தயார் செய்து பயன்படுத்தக்கூடிய இயற்கை உரங்களான அமுத கரைசல் ஜீவாமிர்த கரைசல் மீன் அமினோமிலம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி போன்றவை தயாரிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு செயல் விளக்கமாக செய்து காட்டினார். கன்னியாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News