தென்னையில் ஊடுபயிராக சணப்பு: மண் வளம் காக்க வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்

தென்னையில் ஊடுபயிராக சணப்பு பயிரிட்டு மண் வளம் காக்க மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-08 10:52 GMT

சாகுபடி வயலை வாட்டாகுடி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர்.

மதுக்கூர் வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்ள புலவஞ்சி, சிரமேல்குடி, வாட்டாகுடி, வாட்டாகுடி, உக்கடை மற்றும் மூத்தாக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சணப்பை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்துள்ள வயலை வாட்டாகுடி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர்.

விவசாயியுடன் கலந்துரையாடிய பின் வேளாண்மை உதவி இயக்குனர் கூறுகையில், பசுந்தாள் உர பயிரான சணப்பு பயிரிடுவதால் மண்வளம் காக்க படுவதோடு கோடைகாலத்தில் 45 நாட்களில் பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் கட்டுமானம் மாற்றப்பட்டு அதிக காற்றோட்டம் கிடைக்கிறது. மண்ணின் சத்துக்களும் அதிகரிக்கிறது.

இதில் உள்ள வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துவதால் தென்னைக்கு யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை விவசாயிகள் விலை கொடுத்து வாங்கி உரச்செலவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும். மண்ணின் கரிமச்சத்து அதிகரித்து தென்னையில் காய் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு விதைத்து பூ பூக்கத் துவங்கும் 45 நாட்களில் மடக்கி உழுவதன் மூலம் ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழையானது மண்ணில் சேர்க்கப்படுகிறது. மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் மக்கி மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு தேவையான உணவையும் அளிப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கமும் ஏற்படுகிறது.

கோடைகாலத்தில் சணப்பு பயிரிடுவதன் மூலம் தேவையற்ற முறையில் தென்னந்தோப்புகளில் நீர் ஆவியாவது தவிர்க்கப்படுவதோடு தென்னந்தோப்புகளில் மிக எளிய முறையில் களைக்கொல்லி இன்றி களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. சணப்பு பயிரிடும் விவசாயிகள் முக்கியமாக கவனிக்க வேண்டியது பூ பூக்கத் துவங்கியவுடன் மண்ணில் மடக்கி உழுது விட வேண்டும். சணப்பில் காய்உருவாகும் வரை தென்னந்தோப்பில் விட்டு வைக்கும் போது சணப்பு பயிர் தோப்பிலே மண்ணிலிருந்து சத்துக்களை தனக்கு எடுத்துக் கொள்ளத் துவங்கும்.

பூக்கும் பருவத்தில் தான் வேர் முடிச்சுகள் அதிக அளவில் காணப்படும். எனவே விவசாயிகள் சணப்பு பயிரிட்டு மண்வளம் காப்பதோடு இயற்கையான உரமிடுவதால் யூரியா விற்காக ஏற்படும் செலவையும் குறைத்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெற வாய்ப்பு உள்ளது.

தற்பொழுது ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் தருணத்தை பயன்படுத்தி வேறு பயிர் சாகுபடியை துவங்குவதற்கு முன் மண் வளத்தை காக்கவும் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு பயனடையுமாறு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

விவசாயி அலெக்சாண்டர் தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு மானிய விலையில் காலத்தே பசுந்தாள் உரப் பயிர்களை வழங்கினால் விவசாயிகளுக்கு மிக உதவியாக இருக்கும் என தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News