தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு முதற்கட்ட பயிற்சி

பாரம்பரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு விவசாயிகளுக்கு முதல் நிலை பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-09 03:58 GMT

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு விவசாயிகளுக்கு முதல் நிலை பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் பாரம்பரிய கிருஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய செய்கைகள் மேற்கொள்ள உள்ள 20 எக்டர் தொகுப்பில் 26 விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அத்திவெட்டி இயற்கை விவசாயிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிற்கான முதல் கட்ட பயிற்சி  தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தலைமையில், வடிவேல் மூர்த்தி செயலாளர் இயற்கை விவசாயிகள் குழு அவர்களின் தோப்பில் நடைபெற்றது. திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி   அனைத்து விவசாயிகளின் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகளின் தென்னந்தோப்பில் இயற்கை விவசாயம் மேற்கொள்வதற்கு முன்னும் பின்னும் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் ரசாயனங்களின் நிலையானது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட உள்ளது. திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இயற்கை விவசாய குழுவினர் மூன்று ஆண்டுகளில் பருவம் வாரியாக தென்னந்தோப்புகளில் எத்தகைய பணிகள் இயற்கை விவசாயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் சான்றளிப்பு முறை எவ்வாறு மேற்கொள்ளப்படும் விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் ஆய்வு முறைகள் மற்றும் அவர்களின் பங்களிப்பு குறித்து விதைச்சான்று அலுவலர் சங்கீதா  தெளிவாக விளக்கி கூறினார்.

வேளாண்மை அலுவலர் இளங்கோ துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் வேளாண்மை துறையின் மூலம் தென்னை இயற்கை விவசாய குழுவினருக்கு வழங்கப்பட உள்ள இயற்கை இடுபொருள் ஆன உயிர் உரம் சூடோமோனஸ் .டிவிரிடி மற்றும் கடல்பாசி உரங்கள் போன்றவை குறித்து எடுத்துக்கூறினர்.

வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை சேகரம் செய்து பிஜிஎஸ் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை பரிசீலித்து இயற்கை விவசாயம் மட்டும் செய்வோம் என்று விவசாயிகளிடம் உறுதிமொழி ஆவணங்களை பெற்றார். வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்கள் மூன்று ஆண்டுகள் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தில் தென்னை இயற்கை விவசாயிகளுக்கு எத்தகு மானிய உதவிகள் அரசு மூலம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் அங்கக சான்றளிப்பு துறை மூலம் இலவசமாக இயற்கை விவசாய சான்று ஆய்வுக்கு பின் வழங்கப்படுவது குறித்தும் எடுத்துக் கூறி விவசாயிகள் திட்டத்தின் பலன்களை சிறப்பாக பெற்று இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்க கேட்டுக் கொண்டார்.

இயற்கை விவசாய குழுவினருக்கு முன்னோடி விவசாயி பைரவ மூர்த்தி அமுதக்கரைசல் பஞ்சகாவ்யா தயாரிப்பு பற்றியும் ஐந்து இலை கரைசல் எவ்வாறு பூச்சி விரட்டியாக செயல்படுகிறது என்பதை செயல் விளக்கமாக செய்து காட்டினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை இயற்கை விவசாய குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம் வடிவேல் மூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர். அட்மாதிட்ட அலுவலர் சுகிதா குழு உறுப்பினர்களிடம் பயிற்சி குறித்த பின்னூட்டத்தினை பெற்று பதிவு செய்து பயன்பெற்ற விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

Tags:    

Similar News