மதுரபாஷினிபுரத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி கையேடு வழங்கும் விழா
மதுரபாஷினிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி கையேடு மற்றும் கிட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுரபாஷினிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி கையேடு மற்றும் கிட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்ட விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி கிட்டுகள் மற்றும் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த கையேடுகள் ரூ.400 மதிப்பில் வழங்கப்பட்டது.
மதுக்கூர் வட்டாரத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுரபாஷினிபுரம், பெரியகோட்டை, புளியங்குடி, ஒலையகுன்னம், கீழக்குறிச்சி, நெம்மேலி, அண்டமி, புலவஞ்சி மற்றும் மஹாதேவபுரம் ஆகிய 10 கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சம்பா பருவத்தில் நெல் சாகுபடியில் உழவர் வயல்வெளி பள்ளி நடத்தப்பட்டது.
வயல் அளவில் நன்மை தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் பூச்சி நோய் மேலாண்மைகளை, மேலாண்மை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் போன்றவை குறித்து கள அளவில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பயிற்சியின் முடிவாக 6 வகுப்புகளில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு பயிற்சி கிட்டும், நெல் வயல்வெளி பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்டவை விவசாயிகள் எப்பொழுதும் தெரிந்துகொள்ளும் வகையில் வயல்வெளி பள்ளி கையேடு ஒன்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமை தாங்கி, வயல்வெளி பள்ளியில் விவசாயிகள் கற்றுக்கொண்டதை வயல்வெளியில் செயலாக்கம் செய்ய கேட்டுக் கொண்டார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு கிட்டு மற்றும் கையேடுகளை வழங்கினார்.