மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படும் என வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-11 09:36 GMT

சொக்கனாவூர் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர் இளங்கோ, அன்புமணி மற்றும் பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் உரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்கவும், விவசாயிகளின் விளைச்சலை அதிகப்படுத்தவும் ஜூன் 12 முதல் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.75.95 கோடி டெல்டா விவசாயிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்திற்கு குருவை சாகுபடியினை செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 100% மானியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் உரம் வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுக்கூர் வட்டாரத்திற்கு குறுவை சாகுபடிக்கு 900 எக்டேர் குறுவை சாகுபடிக்கு இலக்கு ஒதுக்கீடு பெறப்பட்டு, அதில் போர்வெல் வைத்துள்ள விவசாயிகள் மூலம் இதுவரை 460 எக்டேர் வரை குறுவை சாகுபடி நிறைவடைந்துள்ளது.

மீதம் 450 எக்டர் வரை விவசாயிகள் நேரடி விதைப்பாகவும் திருந்திய நெல் சாகுபடி முறையிலும் மற்றும் வரிசை நடவும் மேற்கொண்டு வருகின்றனர். குருவை சாகுபடி செய்கின்ற விவசாயிகள் பயனடைய தக்க வகையில் ஒரு ஏக்கருக்கு 2466 ரூபாய் என்ற மதிப்பில் 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி உரம் மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரம் அடங்கிய உரத் தொகுப்பு 100% மானியத்தில் வழங்கப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகளின் இடுபொருள் செலவு குறைவதாக மதுக்கூர் வட்டார விவசாயிகள் தெரிவித்தனர்.

குறுவை தொகுப்பு திட்டத்தில் பயனடைய விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறுவைசாகுபடி அடங்கல். குறுவை சாகுபடி செய்துள்ள வயலில் லேட்லாங்குடன் ஒரு புகைப்படம் எடுத்து நேரடியாக உழவன் செயலில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். 

நேரடியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தும் விவசாயிகளுக்கு உதவி புரிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குறுவை சிறப்பு சேவை மையத்தில் தங்களுடைய ஆதார் எண் அடங்கல் மற்றும் புகைப்படத்தினை வழங்கி பதிவு செய்து அதற்கான ஓடிபி பெற்றுக்கொண்டு அந்தந்த வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வேளாண் உதவி இயக்குனர் அனுமதி படிவத்துடன் சென்று உரத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டார்.

உரம் யார் பெயரில் வழங்கப்பட்டுள்ளதோ அந்த விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் ஓடிபி எண்ணினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரிடம் தெரிவித்து உர விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உரம் பெற இயலும்.

மதுக்கூர் வட்டாரத்தில் 2400 ஏக்கர் குறுவை சாகுபடி உள்ள நிலையில் 1200 ஏக்கருக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்கு இலக்கு பெறப்பட்டுள்ளதால் விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெற உள்ளதால் உரிய காலத்திற்குள் உழவன் உழவன் செயலியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு தேதி அடிப்படையில் வழங்கப்பட உள்ளதால் தகுதி உள்ள சிறுகுறு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News