மதுக்கூர் அருகே காரப்பங்காடு கிராமத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் காரப்பங்காடு கிராமத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுக்கூர் வட்டாரம் காரப்பங்காடு கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெல் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை சாகுபடி செலவினை குறைக்கும் வகையிலும் தற்சார்பு முறையில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் இயற்கையான உரங்கள் தயாரிப்பு மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிவது எப்படி போன்றவை குறித்த விவசாயிகளுக்கான 6 நாள் பயிற்சி நடைபெற்று வருகிறது.
வாரத்துக்கு ஒரு நாள் வீதம் 6 வாரம் நடைபெறும் பயிற்சியில் ஒவ்வொரு வாரமும் நெல்லின் பல்வேறு நிலைகளில் ஏற்படும் பூச்சிகள் நோய்கள் இவைகளை கண்டறிவது பயிரின் தேவை அறிந்து உரமிடுவது நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீமை செய்யும் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது; எந்த முறைகளை தேர்வு செய்வது களைக்கட்டுப்பாடு; நுண்ணூட்ட சத்து தேவை மற்றும் யூரியா உரத்தினை ஜிப்சம் வேப்பம் புண்ணாக்கு கலந்து விடுவது போன்றவை பற்றி கற்றுத் தரப்பட்டு வருகிறது.
இரண்டாவது வாரம் நடைபெற்ற பயிற்சியில் வயல் வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு விவசாயத்துறையின் மூலம் வழங்கப்படும் அசோஸ்பைரில்லம் பாஸ்போபேக்டீரியா மெட்டாரஸ்யம் டிரைக்கோ டெர்மா மற்றும் நெல் நுண்ணூட்டம் போன்றவைகளின் முக்கியத்துவம் பற்றி ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு விரிவாக விளக்கி கூறப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமாக செய்து காட்டினார். பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் குமார் விவசாயத் துறையின் பல்வேறு திட்டங்கள் தேவைப்படும் பயனாளிகள் குறித்து விபரம் சேகரித்தார் அட்மா திட்ட அலுவலர் ராஜு பயிற்சியினை ஒருங்கிணைத்தார். காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் புனிதா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.