மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான்கள் குறித்து அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் மூலம் விக்ரமம் கிராமத்தில் வழங்கப்பட்ட கை தெளிப்பான்கள் மற்றும் தென்னங் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளமை குறித்து நேரடியாக பயனாளிகளிடம் கள ஆய்வு செய்தார். விக்ரமம் கிராமத்தில் லட்சுமணன், காளிமுத்து, காசிநாதன் போன்ற விவசாயிகளிடம் கைத் தெளிப்பான் வழங்கப்பட்டுள்ள விபரம் குறித்தும் முனீஸ்வரி வயலில் தென்னங் கன்றுகள் நடவு செய்துள்ளது பற்றியும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.
கள ஆய்வின்போது விக்ரமம் பணித்தள பொறுப்பாளர் நிரோஜா உடனிருந்தார். மேலும் அத்திவெட்டி கிராமத்திலும் கலைஞர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங் கன்றுகள் நடவு செய்துள்ளதை மாரிமுத்து புஷ்பவள்ளி சாரதம் போன்ற விவசாயிகளின் வயலில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.
அத்திவெட்டி பஞ்சாயத்து ஆய்வின்போது வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் உடனிருந்தார். கலைஞர் திட்ட பஞ்சாயத்துகளில் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அனைத்து வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி திட்ட செயல்பாட்டில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்து இருப்பில் உள்ள விதை நெல்லினை முளைப்பு திறன் பரிசோதனை மேற்கொண்டு உள்ளதா என்பது குறித்தும் உதவி விதை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் உடன் இருந்தனர்.