மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கல்
அட்மா திட்டத்தின்கீழ் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வேளாண் துணை இயக்குனர் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.
வேளாண் கருவிகளான தென்னை மரம் ஏறும் கருவி, நெல் சாகுபடிக்கு தேவையான கோனோவீடர், பயிர் பாதுகாப்புக்கு தேவையான தெளிப்பு கருவிகள் மற்றும் மீன் வளர்ப்புக்கு தேவையான இடு பொருளும் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர் இன்று வழங்கினார்.
விவசாய கருவிகள் வழங்கும் நிகழ்வில், மதுக்கூர் வடக்கு கண்ணதாசன், நெம்மேலி சரவணன், அத்திவெட்டி ராஜ்குமார் ஆகியோருக்கு தென்னை மரம் ஏறும் கருவிகள் வழங்கப்பட்டது.
அறிவழகன் என்பவருக்கு திருந்திய நெல் சாகுபடிக்கு தேவையான கோனோவீடர் கருவியும், இளங்காடு மாணிக்கவாசகம் மற்றும் காடந்தன்குடி பெருமாள் ஆகியோருக்குபயிர் பாதுகாப்பிற்கு தேவையான கை தெளிப்பான் வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயத்தில் முன்னோடியான புலவஞ்சி தேவி என்பவருக்கு இயற்கை உரங்களும், ஆலம்பள்ளம் உமாராணி என்பவருக்கு மீன் வளர்ப்புக்குத் தேவையான இடு பொருளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு, ஐயா மணி செய்திருந்தனர். வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், சுரேஷ், ஜெரால்ட், கார்த்தி மற்றும் தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர் சாந்தி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி இடுபொருள் பெற்ற விவசாயிகளிடம் அட்மா திட்டத்தின் மூலம் பயனடைந்து விவசாயிகளுக்கு முன்னோடியாக இருக்கவும் கேட்டுக்கொண்டார்.