மதுக்கூர் வட்டாரத்தில் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு
மதுக்கூர் வட்டாரத்தில் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் பாலசரஸ்வதி மதுக்கூர் வட்டாரத்திற்கு வருகை புரிந்து அட்மா திட்ட பணிகள் ராபி பருவ பயிர் காப்பீட்டு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் அதீத பாதிப்புக்கு உள்ளாகும் பரப்புகள் குறித்த திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் பெரிய கோட்டை முன்னோடி விவசாயி இளமாறன் தோப்பில் அட்மா திட்டத்தின் கீழ் வேர் மூலம் தென்னை டானிக் கட்டுவதற்கான செயல் விளக்கத்தை நடத்தி விவசாயிக்கு தென்னை டானிக் வழங்கினார். ஐந்து வகையான நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய தென்னை டானிக் வேர் மூலம் கட்டுவதால் குரும்பை கொட்டுவது குறைந்து அதிகமாக மகசூல் கிடைப்பதை விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
பின்னர் வடகிழக்கு பருவமழையினால் ஒவ்வொரு வருடமும் பாதிப்புக்குள்ளாகும் கண்ணனாறு ஒட்டி உள்ள பெரியகோட்டை சொக்கனாவூர் மற்றும் புளியக்குடி கிராமங்களில் தற்போதைய நெல்பயிரின் நிலையினை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சொக்கனாவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கப்படுவதை பார்வையிட்டு இன்றைய தினத்துக்குள் காப்பீட்டு பணியினை முடித்திட விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.
சொக்கனாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பாலசுப்ரமணியன் மற்றும் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான காலத்தினை மேலும் நீட்டிப்பு செய்து தருமாறு வேளாண் துணை இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வுக்கான ஏற்பாடுகளை பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் செய்திருந்தார். அட்மா திட்ட செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு , அய்யா மணி ஆகியோர் செய்திருந்தனர். ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் அலுவலர் இளங்கோ ஆகியோர் இருந்தனர்.