மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விழிப்புணர்வு

மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள்.;

Update: 2023-11-06 10:08 GMT

விழிப்புணர்வு குறித்த கையேடுகளுடன் விவசாயிகள்.

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க வேளாண் உதவி இயக்குனர் அடங்கிய அலுவலர்கள் குழு கிராமம் கிராமமாக இப்கோ டோக்கியோ நிறுவன அதிகாரிகளுடன் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

நடப்பு சம்பா பருவத்தில் மதுக்கூர் வட்டாரத்தில் இந்நாள் வரை 3100 எக்டர் சம்பா நடவு முடிந்துள்ளது. தாளடி நடவு 50 எக்டருக்கு மேல் முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் முடிய குறுவை அறுவடை முடிந்த விவசாயிகள், தாளடி நாற்றங்காலில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளும் தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

மதுக்கூர் வட்டாரத்தை பொறுத்தவரை, நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் தாளடி நடவும் முடிவு பெற்றுவிடும். எனவே அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15க்குள் விதைப்பு செய்த அல்லது நடவு செய்தமைக்கான சிட்டா, அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கிக் கணக்கு  புத்தகத்தின் முதல் பக்கத்துடன் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 542 வீதம் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும். 

இந்த காப்பீடு நவம்பர் பதினைந்துக்குள் பொது சேவை மையத்திலோ, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது அரசு வங்கிகளிலோ காப்பீட்டு பணியை செய்து முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காப்பீடு செய்யும் போது, விவசாயிகள் காப்பீடு செய்தமைக்கான கணினி ரசீதினை அவசியம் பெற்றுக் கொள்ளவும். கணினி ரசீதில் சாகுபடி செய்துள்ள கிராமம், அடங்கலில் உள்ள சர்வே எண்கள் அனைத்தும் விடுபாடு இன்றி பதிவு செய்யப்பட்டுள்ளதா பரப்பு சரியாக பதியப்பட்டுள்ளதா என்பவற்றை உடனடியாக சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சில நேரங்களில் வசிப்பிடத்தில் உள்ள கிராமம், ஆதார் நகல் அடிப்படையில் சாகுபடி கிராமமாக பதியப்பட்டு விடுகிறது. இந்நிலையில் அந்த சர்வே எண்கள் குறிப்பிட்ட கிராமத்தில் இல்லாத பட்சத்தில் கூடுதலாக சாகுபடி பரப்புக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதாக ஆய்வுக்குப் பின் தள்ளுபடி செய்திட வாய்ப்புள்ளது.

இப்போது விவசாயிகள் அனைவரும் நான்கு ஆண்டுக்கு மேலாக இன்சூரன்ஸ் செய்து வருவதால் இத்தகைய தவறுகளை தவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. வங்கி கணக்கு எண் தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தால் கூட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையானது வரவு வைக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் தங்களுடைய சாகுபடி கிராமமும், அடங்கலில் உள்ள சர்வே எண்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறுகள் இருப்பின் உடனடியாக பிரீமியம் செலுத்திய இடத்தில் தெரிவித்து தவறுகளை சரி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நகைக் கடன் பெறும்போது, வழங்கும் சர்வே எண்ணை பொது சேவை மையத்திலும் வழங்கி இருமுறை பிரிமியர் தொகை செலுத்தப்படும் தவறுகளும் நிகழ்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகளின் ப்ரீமிய பங்குத் தொகையும் கூடுதலாக வரவுவைக்கப்படும். இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது.

நமது சம்பா சாகுபடி பிரீமியம் செலுத்தும் பட்டியலில் நெல் 2 (ராபி) என்றால் சம்பா பருவத்தை குறிக்கிறது. கடந்த வருடம் சில விவசாயிகள் தவறுதலாக நெல் 3 என்ற தலைப்பில் கோடை நெல் சாகுபடியின் கீழ் சம்பா நெல்லினை காப்பீடு செய்திருந்தனர். அத்தகு தவறுகளும் மீள சரி செய்யப்பட்டது. மதுக்கூர் வட்டாரத்தை பொறுத்தவரை கடந்த வருடம் போல் அக்டோபர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இல்லை. ஆனால் வானிலை மைய ஆய்வுப்படி நவம்பர் மாதத்தில் அதிக மழையானது எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் இயற்கை சீற்றங்களில் இருந்து நமது பயிரை காத்துக் கொள்ளவும், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இயன்றவரை நவம்பர் 15 க்குள் காப்பீட்டு பணிகளை முடித்துக் கொள்ளவும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகள் தாங்கள் பிரீமியம் செலுத்திய கணினி ரசீதினை பெற்று சரி பார்த்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிர் காப்பீடு செய்திட ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் முருகேஷ், ராமு, பூமிநாதன், சுரேஷ், ஜெரால்டு மற்றும் மதுக்கூர் வட்டார இப்கோ டோக்கியோ அலுவலர் மணி, அட்மாத்திட்ட அலுவலர் ராஜுஆகியோர் அடங்கிய குழுவினர் இதுவரை 27 கிராமங்களில் விவசாயிகள் கூடும் இடங்களில் நேரடியாக சந்தித்து விவசாயிகளுக்கு தேவையான கைப்பிரதிகளை வழங்கியதோடு ஆங்காங்கே விழிப்புணர்வு பணியும் மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு பணியின் போது விவசாயிகள் கடந்த வருடம் கட்டிய பிரிமியத்திற்கு இழப்பீடு தொகை கிடைக்கப்பெறவில்லை என கேட்டுக்கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் கடந்த மூன்று வருடங்களில் நமது வட்டாரத்தில் அந்தந்த கிராமங்களில் கிடைக்கப் பெற்ற சராசரி உத்தரவாத மகசூலை விட கடந்த வருட மகசூல் கூடுதலாக இருந்ததால் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

காப்பீடு தொடர்பாக வேறு ஏதேனும் தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள்தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News