மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு நடைபெற்றது.

Update: 2023-04-27 06:04 GMT

களிச்சான் கோட்டை கிராமத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு பாதிப்பு குறித்து வேளாண் விஞ்ஞானி மதியழகன் விவசாயிகளுக்கு விளக்கிக் காட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் வாட்டாகுடி மற்றும் களிச்சான் கோட்டையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் துறை இணைந்து நடத்திய தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து தென்னை விவசாயிகளுடன் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு நடைபெற்றது.


தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வயலில் வேளாண் உதவி அலுவலர்கள் அடங்கிய குழு மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து தென்னை சாகுபடி செய்யும் கிராமங்களிலும் கடந்த 20 ஆம் தேதி முதல் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களுக்கான கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகளுக்கு நேரடியாக தென்னந்தோப்புகளில் செயல் விளக்கமாக செய்து காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வட்டார அளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து  வாட்டாக்குடி மற்றும் களிச்சான் கோட்டை கிராமத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்கள் அதனை அறிந்து கொள்ளும் முறைகள் அதன் கட்டுப்பாட்டு முறைகள் பற்றியும் கருத்து காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் நேரடியாகவும் வயல்வெளியில் செயல் விளக்கமாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி விஞ்ஞானி மதியழகன் மிகச் சிறப்பாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தென்னை விவசாயிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் பல்வேறு மானிய திட்டங்கள், தென்னைக்கான காப்பீடு தென்னைக்கு உயிர் உரங்கள் 50 சத மானியத்தில் வழங்கப்படுவது போன்றவை பற்றி எடுத்துக் கூறினார்.

துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, தென்னை நுண்ணூட்டம் விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவது குறித்தும் தென்னை நுண்ணூட்டத்தின் முக்கியத்துவம் பற்றிய விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு, அய்யா மணி ஆகியோர் கருத்துக்காட்சியை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். வாட்டாகுடி கிராமத்தில் தென்னையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவதற்கான டிவிரிடி பயன்படுத்துவது பற்றி செயல் விளக்கமாக வேளாண் விஞ்ஞானியுடன் இணைந்து வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு பூமிநாதன் மற்றும் சுரேஷ் செய்திருந்தனர்.

மேலும் காண்டாமிருக வண்டின் இளம்புழுக்கள் அரைகுறையாக வெட்டப்பட்டுள்ள தென்னை மரங்களில் அளவில்லாத எண்ணிக்கையில் இருப்பதனையும், அதனால் தோப்பிற்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்தும் வேளாண் விஞ்ஞானி எடுத்துக் கூறினார்.

வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர் மெய்ய நாதன் மற்றும் முன்னோடி விவசாயிகள், அரசிடம் தென்னை மட்டை தூளாக்கும் இயந்திரம் மற்றும் தென்னந்தோப்புகளில் உரமிடுவதற்கான காண்பறிக்கும் கருவியையும் மானியத்தில் வழங்க கோரினர். அதன்பின் களிச்சான் கோட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் மூலம் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னோடி தென்னை விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு ஐயப்பன் தோப்பில் தென்னை மரத்தின் அடிப்பகுதியில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்வண்டின் இளம்புழுக்கள் எவ்வாறு தூய்மையாக பராமரிக்காத தென்னை மரத்தினை பாதித்துள்ளன என்பதைப் பற்றி மிக சிறப்பான செயல் விளக்கத்தை வேளாண் விஞ்ஞானி செய்து காட்டினார்.

மேலும் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டினை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சிறப்பு தயாரிப்பான தென்னை டானிக் பயன்படுத்துவதன் மூலம் தென்னந்தோப்புகளில் எவ்வாறு மகசூல் அதிகரிக்கப்படுகிறது என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் வயலாய்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். களிச்சாங்கோட்டை முன்னோடி விவசாயி ஐயப்பன் வேளாண் துறை மூலம் நடத்தப்படும் இத்தகு வயலாய்வு முகாம்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக நன்றி கூறினார்.

Tags:    

Similar News