புளியகுடி கிராமத்தில் வேளாண்மை குழு கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு
தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் புளியகுடி கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புளியகுடி கிராமம் தேர்வு செய்யப்பட்டது. இந்த கிராமத்தில் நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்கத்திற்கான விவசாயிகள் பயிற்சி மற்றும் கிராம மேலாண்மை குழு கூட்டம் மற்றும் நுண்ணீர் பாசன விவசாயிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
மன்ற தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். புளியங்குடி கிராமத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் தேவையான மரக்கன்றுகள் விபரம் குறித்து தெரிவித்தனர். இவ்வருடம் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வனத்துறை மூலம் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையுடன் வழங்கப்பட உள்ளது.
மேலும் மதிப்பு அதிகம் உள்ள மகாகனி, தேக்கு, சிவப்பு சந்தனம் மற்றும் சந்தனம் போன்ற மரங்களை விவசாயிகள் நீண்டகால நோக்குடன் சிந்தித்து தங்கள் வயலில் வரப்புகளிலும் பயிரிடாத இடங்களிலும் நட்டு பலன் பெற வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.
பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி தோட்டக்கலைத்துறை திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொண்டார். தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டத்திற்காக வேண்டிய ஆவணங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.
மதுக்கூர் தோட்டக்கலை உதவி அலுவலர் சரவணன் பயிர்கள் வளர்ப்பில் நீரின் தேவை மற்றும் சிக்கனம் பற்றி எடுத்துக்கூறி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொண்டார். பிரிமியர் கம்பெனி பட்டுக்கோட்டை அலுவலர் யோகராஜ் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் பயன் பெற தேவையான ஆவணங்கள் பற்றி எடுத்துரைத்தார். கூட்டத்தின் முடிவாக புளியகுடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி பகிர்ந்து கொள்ள பயன்பெற கேட்டுக் கொண்டார்.