பாவாஜி கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறையின் முப்பெரும் விழா
மதுக்கூர் வட்டார பாவாஜி கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் பாவாஜி கோட்டை பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் தலா இரண்டு நெட்டை தென்னங்கன்றுகள் ரூ.120 விலையில் 100% மானியத்தில் வழங்கப்பட்டது.
மேலும் அட்மா திட்டத்தின் கீழ் கலாஜதா நிகழ்ச்சியின் மூலம் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானிய விலையில் ஏக்கருக்கு வம்பன் 8 சான்று விதைகள் எட்டு கிலோ உளுந்து வீதம் மானியத்தில் வழங்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டு பாவாஜி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் அவர்கள் மூலம் பாலாஜி கோட்டை கிராமத்திலேயே 13 விவசாயிகளுக்கு உளுந்து விதை 50% மானியத்தில் வழங்கப்பட்டது.
மேலும் சோயா சாகுபடி குறித்த முனைப்பு இயக்கமும் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் செயல் விளக்க தளைகளுக்கு சோயா மற்றும் டி.விரிடி வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் சோயா சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் கூடுவது குறித்தும் சக்தி சோயா நிறுவனத்தின் மூலம் சோயா கொள்முதல் செய்யப்படுவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. புதிதாக தென்னை பரப்பு விரிவாக்கம் செய்யும் அனைத்து விவசாயிகளும் சோயா சாகுபடி செய்திடுவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
கலைஞர் திட்டத்தின் மூலம் பாவாஜி கோட்டை கிராம பஞ்சாயத்தில் 250 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது. ஆர் வி எஸ் வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலியில் பதிவு செய்வது குறித்தும் நெட்டை தென்னகன்றுகளின் நடவு முறை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ,கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ், உதவி விதை அலுவலர் இளங்கோ மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் ராஜூ மற்றும் அய்யா மணி ஆகியோர் விவசாயிகளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
நிகழ்ச்சிக்கு பாவாஜி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார் முன்னோடி விவசாயிகள் சுப்ரமணியன் அடைக்கலம் திருஞானம் மற்றும் தீபிகா ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.