தென்காசி மாவட்டத்தில் இலவச கடன் விண்ணப்ப பதிவு முகாம்: ஆட்சியர் தகவல்
இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த வருடம் 75 பேருக்கு மட்டுமே மானியத்துடன் கூடிய கடனுதவி என்பதனை இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில்கள் புதியதாக தொடங்க 25 சதவீதம் தமிழக அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரி வினர் 45 வயது வரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 55 வயது வரையிலும் விண்ணப்பி க்கலாம்.
மேலும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்களை திட்டங்களை 25 சதவீத மானியத்துடன் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க ஏதுவாக புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டமும் தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன் பெற குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டய படிப்பு அல்லது தொழிற் கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்
இந்த 2 திட்டங்களில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp மற்றும் www.msmeonline.tn.gov.in/ needs என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வியாபாரம் செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பாக நாளை வியாழக்கிழமை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இலவசமாக கடன் விண்ணப்பங்கள் பதிவு செய்து அன்றைய தினமே நேர்காணலும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருநாள் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விலைப்புள்ளி ஆகியவற்றை 2 நகல்களும் மற்றும் அசலினை சரிபார்ப்பதற்காக எடுத்து வர வேண்டும்.
மாவட்ட தொழில் மையத்தில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான விபரங்களுக்கு 8778074528 மற்றும் 9790444577 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 5/5(2), 5/5(3) திருமலைக்கோவில் ரோடு, குத்துக்கல்வலசை, தென்காசி -627803 என்ற முகவரியிலோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர் இந்த திட்டங்களில் விண்ணப்பித்து மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்கி தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்