எண்ணும் எழுத்தும் பயிற்சியா? இதிகாச காலக் காட்சியா?

எண்ணும் எழுத்து பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கு ஆதிவாசி வேடம் அணிவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது

Update: 2023-05-24 10:30 GMT

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்குக் கருத்தாளர்களாகச் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் போது, நிகழ்த்திய ஆதிவாசி நடனம் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நடன நிகழ்ச்சிக்கும், எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதை சம்பந்தப்பட்டவர் கள்தான் விளக்க வேண்டும். இதுபோன்ற இலை, தழைகள் அணிந்த நடன அசைவுகளின் மூலமாக எந்த மாதிரியான கற்பித்தல் நிகழ்வை நடத்திட முடியும் என்பதையும் பயிற்சி அளித்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாட்டு ஆசிரியர்களும், பொதுமக்களும் கூட எதிர்பார்க்கிறார்கள்.

இன்றைய சூழலில் ஆதிவாசிகள் எனக் குறிப்பிடப்பட்ட மக்களே நவநாகரீக உடை அணிந்து மக்கள் கூட்டத்தில் கலந்து விட்ட காலத்தில் இவர்கள் ஏன் இப்படி கிளம்பினார்கள்? என்பது தான் புரியவில்லை.கையடக்கக் கருவிக்குள் உலகமே சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், கருவிலே இருக்கும் குழந்தைக்குக் கூட அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இன்றைய நிலையில் அறிவியல் பூர்வமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆசிரியர்களை கற்கால மனிதர்களாக உருமாற்றி, அதைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது என்பது எவ்விதத்திலும் ஊக்கம் தருவதாகவும் இல்லை;ஆக்கம் தரும் என்ற நம்பிக்கையும் இல்லை.

சமூக வலைதளங்களில் இக்காட்சியைப் பார்த்த ஆசிரியர்கள் அடுத்து ஜூன் 1, 2, 3ம் தேதிகளில் நடைபெறவுள்ள பயிற்சி வகுப்புகளிலும் தாங்கள் இதேபோன்று வேடமிட வேண்டிய சூழல் உருவாகி விடுமோ என்ற அச்சத்திலும், அவநம்பிக்கை யிலும் உள்ளனர். ஒருவேளை இந்த ஆதிவாசி வேடம் கற்கால மனிதனின் வாழ்க்கையை மாணவர்களுக்குப் போதிப்ப தற்கான முயற்சி என்று சம்பந்தப்பட்டவர்கள் காரணம் கூறினாலும் கூட, வகுப்பறையில் ஒரு ஆசிரியர் இதுபோன்று வேடமிட்டு வந்தால் மாணவர்கள் மத்தியில் எவ்வாறான சிந்தனை தோன்றும் என்பதையும், ஆசிரியர்களைப் பற்றிய அவர்களது பிம்பம் எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிற போது ஆசிரியர்கள் என்றாலே அவதூறு பரப்பும் சில அதிமேதாவிகளுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போலாகிவிடும் அல்லவா? இக்காணொளியில் தோன்றும் ஆசிரியர்கள் அவர்களுக்குப் பயிற்சிதரும் உயர் அலுவலர்களின் அல்லது பயிற்சியை வடிவமைத்த மகா நிபுணர்களின் கைப்பாவையாகவே மாறிவிட்ட கொடுமை தான் இது. அவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுவது என்பது ஆசிரியர் பணியின் கண்ணியத்தை எவ்விதத்திலும் தக்க வைக்க உதவாது.

இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தங்கள் சுயமரியாதைக்கு சேதாரம் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் அலுவலர்கள், பயிற்சியாளர்கள் தூண்டினாலும் அவற்றை மறுதலிக்கும் மன உறுதி கொண்டவர்களாக மாற வேண்டும். சமீபகாலமாக வட்டார வளமைய அளவிலான,குறுவளமைய அளவிலான பயிற்சிகளிலும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் ஆசிரியர்களைக் கூட அங்க அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடச்செய்து அவர்களை மன ரீதியாக,உடல் ரீதியாக சிரமப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

எனவே, இனிமேலாவது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடும் வகையில் புதிய புதிய கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுக்கு அளிக்கின்ற பயிற்சியாக இது போன்ற பயிற்சிகள் அமைய வேண்டுமேயொழிய, பொதுமக்கள் மத்தியில் ஏளனத்தை ஏற்படுத்துகிற வகையிலான, ஆசிரியர் பணியைக் கேலிக்குரியதாக மாற்றுகிற வகையிலான நிகழ்ச்சிகளை தவிர்த்திட தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

"கனவுத் திட்டம்" என்று சொல்லப்படுகிற எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-23 ஆம் கல்வியாண்டு வரை 1,2,3 வகுப்புகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது.2023-24 ஆம் கல்வியாண்டு முதல் 4,5 வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.1,2,3 வகுப்புகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்கள் பெற்றுள்ள உண்மையான பலனை கல்வித்துறை ஆய்வு செய்திட வேண்டும்.

பாடப்புத்தகத்தையே படிக்காமல் பயிற்சி புத்தகத்தின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் கற்றல் என்பது,மேல் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் அங்கு பாடப்புத்தகத்தைப் படிக்க வேண்டிய சூழலில் கற்றலின் தொடர் நிகழ்வாக அது அமையுமா? என்பதை ஆய்வு செய்திட வேண்டும். "எண்ணும் எழுத்தும்" என்பது மிகச்சிறந்த திட்டம் என்றால், இத்திட்டம் ஏன் சுயநிதிப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் எழுகிறது.

இதேபோன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆரம்பப்பள்ளிகளில் நடைமுறையில் இருந்த செயல் வழிக்கற்றல்(ABL) திட்டமும் இதே போன்று தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டமும் சுயநிதிப் பள்ளிகளில் இறுதிவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகச்சிறந்த திட்டம் என்று கல்வித் துறையின் உயர் அலுவலர்களாலும், கல்வியாளர்களாலும் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட அத்திட்டம் யாருக்கும் தெரியாமலேயே காணாமல் போனது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு புதிய கற்பித்தல் முறைகள் அவ்வப்போது வீறு கொண்டெழுவதும், பின்பு தானாகவே அது வீழ்ந்து விடுவதும் வரலாற்றின் பக்கங்களில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் கல்வியாளர்கள் என்ற பெயரில் குளிர்சாதன அறைகளுக்குள் அமர்ந்து கொண்டு கிராமப்புற ஏழை மாணவனுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும்?எப்படிக் கற்பிக்க வேண்டும்? என்பதை முடிவு செய்வது தான்.

உண்மையிலேயே ஒரு கற்பித்தல் முறை மகத்தான வெற்றி பெற வேண்டுமென்றால் அது குக்கிராமங்களில், மலைக் கிராமங்களில், கண்விழிக்காத கிராமங்களில் ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் அன்றாடம் அவர்களோடு இரண்டறக் கலந்து கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களால், அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் புதிய கற்பித்தல் முறைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் விளம்பரச் சப்தங்கள் மட்டுமே வேடிக்கை காட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News