ஆவின் எனும் அழுக்கு மூட்டையை சுமக்கும் தமிழக அரசு
தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் ஆவின் நிர்வாகம் கடுமையாக பாழ்பட்டு வருகிறது என பால் முகவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத்தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆவின் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பால் லிட்டருக்கு 12 ரூபாய் விற்பனை விலை உயர்த்தப்பட்டு நான்கு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் பழைய விற்பனை விலை அச்சிடப்பட்டிருக்கும் கவரிலேயே (பக்கவாட்டில் கண்ணுக்குத் தெரியாத வகையில் கணினி அச்சில் புதிய விலை) விநியோகம் செய்யப்படுகிறது. ஒருவேளை வருடக்கணக்கில் தேவைக்கான அச்சடிக்கப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டிருந்ததா..? இல்லை விலை உயர்வே நடக்கவில்லை என்பது போல பழைய விலை அச்சிடப்பட்ட பாலிதீன் கவரை ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து கொள்முதல் செய்கின்றனரா..? தெரியவில்லை.
இதையெல்லாம் ஆவின் நிர்வாக இயக்குனர், இணை நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர்கள் கண்காணிக்கிறார்களா..? இல்லை பால் கொள்முதலில் கோட்டை விட்டது போல் பாலிதீன் கவர் கொள்முதலிலும் கோட்டை விட்டனரா..? எனவும் தெரியவில்லை.
அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் நற்பெயர் ஈட்டுவது அமைச்சர்களை கடந்து அதிகாரிகளால் தான் என்பது 100% நிதர்சனமான உண்மை. இங்கே அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனத்தால் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அரசுக்கு அவப்பெயரோ டன் கணக்கில் குவிந்து வருகிறது. இந்த அவப்பெயர் எனும் அழுக்கு மூட்டையை அரசு சுமந்து கொண்டே இருக்கப் போகிறதா..? இல்லை அதிரடி நடவடிக்கைகள் மூலம் இறக்கி வைக்கப் போகிறதா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.