சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
பொதுப்பணித்துறையின் சார்பில், திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
பொதுப்பணித்துறையின் சார்பில், திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து நகராட்சிப் பகுதிகள் பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகள் ஆகியவைகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக, மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் அதன் நிலைகள் குறித்தும் களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு , அப்பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி , இன்றையதினம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.3.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் அதேபோன்று காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் என பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கண்ட 3 பணிகளுக்கென மொத்தம் ரூ.10.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ஏ.ரமணன், உதவிப்பொறியாளர் கே.சந்தோஷ்குமார், வட்டாட்சியர்கள் வெங்கடேசன் (திருப்பத்தூர்), ப.தங்கமணி (காரைக்குடி) உட்பட துறை சார்ந்த அலவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.