லேட்டஸ்ட் தொழில்நுட்பத்திற்கு மாறும் சிங்கம்புணரி சுற்றுவட்டார விவசாயிகள்
லேட்டஸ்ட் தொழில்நுட்பத்திற்கு மாறும் சிங்கம்புணரி சுற்றுவட்டார விவசாயிகள்!!;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் இயற்கை விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர். அதேவேளையில், நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளும் அதிகரித்து வருகின்றனர். உரமிடுதல் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பதற்கு, தற்போதைய நவீன தொழில்நுட்பமான ட்ரோன்-ஐ தமிழ்நாடெங்கும் விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கி இருக்கின்றனர்.
எஸ்.புதூர் ஒன்றியத்தில் விவசாயிகள் இயற்கை மற்றும் நவீன முறைகளை கையாண்டு வருகின்றனர். இவர்களுக்கு விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் விளைவாக, முதல்முறையாக ட்ரோன் மூலம் உரம், பூச்சி மருந்து தெளிக்க தொடங்கியுள்ளனர். சிறிய நிலமாக இருந்தாலும் குழுவாக சேர்ந்து ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் நிறுவனத்தை வரவழைத்து அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
நேற்று சிங்கம்புணரி வட்டம் மின்னமலைபட்டியில், விதைப்பண்ணை மூலம் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள ஆண்டி என்பவரது நிலத்தில் முதல்முறையாக ட்ரோன் மூலம் உரம், பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது. கடலைக்கு வழக்கமாக 4 லிட்டர் வரை உரம் செலவாகிய நிலையில் தற்போது கால் லிட்டர் மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும்
ஜி.பி.எஸ்.தொழில் நுட்பத்தால் ஒரு செடி கூட விடுபடாமல் உரம் தெளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ட்ரோன் பயன்படுத்தும்போது ஏரியல் ஸ்ப்ரே மூலம் தெளிப்பதால் 50% முதல் 70% சதவீதம் வரை இராசாயன செலவைக் குறைக்கலாம். 1 ஏக்கர் வயலில் 5 நிமிடம் முதல் 10 நிமிடங்களில் தெளிக்கலாம். மேலும், செலவு குறைவதுடன் மகசூல் அதிகம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.