மழையால் இடிந்த பள்ளிக்கூடம்: மாணவர்கள் பீதி - அமைச்சர் கவனிப்பாரா?
மழையால் சிங்கம்புணரி தாலுகா, வாராப்பூர் ஊராட்சி நடுநிலை பள்ளி இடிந்து விழுந்ததால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள நடுநிலை பள்ளி கட்டிடம், 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையினால், பள்ளிக்கட்டமானது முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
இதில் கல்வி பயின்று வந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, சுமார் 115 மாணவர்கள் பள்ளி வளாகத்தின் வெளியே உள்ள நாடக மேடை கட்டிடத்தில், தற்காலிகமாக கல்வி பயின்று வந்தனர். ஆனால் தற்சமயம் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காரணத்தினாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வரும் காரணத்தினாலும் பள்ளி கட்டிடத்தில் இருந்து மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை உண்டாகி உள்ளது.
இது, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியாகும் 3 முறை இந்த தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனால் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து இந்த பகுதிக்கு பள்ளி கட்டிடம் கட்ட படவில்லை. அவர், மனது வைத்தால், இப்பள்ளி புதுப்பொலிவு பெறும்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கூறுகையில், இந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில கட்டிடம் இல்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து. அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். விபத்து ஏதேனும் நேரிடும் முன்பாக, தமிழக அரசு, மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பெற்றோர், மாணவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது