சிங்கம்புணரி அரணத்தான்குண்டு குடியிருப்பு பகுதியில் மழை நீர் வெளியேற்றம்
பேரூராட்சியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்;
சிங்கம்புணரி அரணத்தான்குண்டு பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பேரூராட்சி சார்பில் மோட்டார் வைத்து நீர் வெளியேற்றம்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வடமேற்கு பருவ மழையின் தீவிர மழையின் காரணமாக தினசரி மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சிங்கம்புணரி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 16 அரணத்தான்குண்டு கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை காக்கவேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கம்புணரி பேரூராட்சி சார்பாக மோட்டார் வைத்து நீர் வெளியேற்றும் பணி துவங்கியது. இந்த அரணத்தான்குண்டு கரையோரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். கூடுதல் மழைநீர் வெளியேற வழி இல்லாத இந்த அரணத்தான்குண்டு பகுதிவாசிகள் ஒவ்வொரு பருவநிலை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சேர்ந்து மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.
இதை அறிந்த சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் ஜான்முகமது தலைமையிலான பணியாளர்கள் தொடர்ந்து கனமழை இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதை அடுத்து நீர் நிரம்பி இருந்த அரணத்தான்குண்டு கண்மாயில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியை துவக்கி உள்ளது.
தண்ணீர் வெளியேற்றுவதற்கான மழைநீர் வடிகால் இல்லாத நிலையில் திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பேரூராட்சியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்