ஊரடங்கால் வந்த வினை.. வடிவேலு பாணியில் அரிசிக் கடை மோசடி; கில்லாடி வாலிபர் கைது

வடிவேலு பாணியில் அரிசி கடைகளில் நூதன மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-08-03 15:28 GMT

நூதன மோசடியில் ஈடுபட்ட வாலிபருடன் போலீசார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, எஸ்.புதூர், புழுதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகளில் அந்தந்த பகுதி முக்கிய பிரமுகர்களின் பெயரை கூறி அரிசி, எண்ணெய் வாங்கி நூதன முறையில் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

சிங்கம்புணரி, எஸ்.புதூர் , புழுதிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு வந்த வாலிபர் ஒருவர், நடிகர் வடிவேலு பாணியில் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகரின் பெயரை கூறி 25 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய் வாங்கி வர சொன்னதாக கூறியுள்ளார்.

அதை நம்பிய மளிகைக் கடைக்காரர்களும் பணம் வாங்காமலேய பொருட்களை கொடுத்துள்ளனர். சிலரிடம் பணம் வீட்டில் மறந்து வைத்து வந்திட்டேன் சரி பராவாயில்லை அப்புறம் காசு கொடுங்க என கூறிய மளிகை கடைகாரர்களும் உண்டு.

இதேபோல பல பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் ஏமாற்றியுள்ளார். அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியாக 25 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய் மட்டுமே வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து புகார்கள் வரத்தொடங்கியது.

இதையடுத்து, மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உத்தரவில் திருப்பத்தூர் டிஎஸ்பி பொன்ரகு மேற்பார்வையில் சிங்கம்புணரி எஸ்ஐ.,க்கள் குகன், அர்ச்சுணன் தலைமையிலான தனிப்படையினர் அந்த வாலிபர் தேடி வந்தனர்.

அந்த வாலிபர் பயன்படுத்திய இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், கடைக்காரர்களை ஏமாற்றிய நபர் மதுரை மாவட்டம் மேலவளவைச் சேர்ந்த செல்வபாண்டி (33) என்பதும், தற்போது மேலூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்,அவரிடமிருந்து 10 அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.

செல்வபாண்டி சமையல் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக சுபநிகழ்ச்சிகள் இல்லாததால் வேலையிழந்த அவர், நூதன முறையில் அரிசி, எண்ணெயை வாங்கி மோசடி செய்துள்ளார்.

அரிசி, எண்ணெயை தான் பயன்படுத்தியது போக மீதியை விலைக்கு விற்றுள்ளார். விற்ற பணத்தில் சில இடங்களில் அன்னதானமும் செய்துள்ளார். இதேபோல் மதுரை மாவட்டத்திலும் ஏமாற்றியுள்ளார் என்று விசாரனையில் தெரிய வந்தது.

Tags:    

Similar News