கண்மாய் கரைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும்
உடனடியாக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது தமிழக அரசும் ,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
எஸ் எஸ் கோட்டை பகுதிகளில் கண்மாய் கரைகளில் உள்ள மணல் சட்டவிரோதமாக அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி தாலுகா, எஸ்.எஸ். கோட்டை அருகே மாத்தூர் ஊராட்சியில் உள்ள கொன்னை கண்மாய் கரையின் இருபுறங்களிலும், டிராக்டர் வாகனங்களை கொண்டு அதிகப்படியான மண் சட்டவிரோதமாக எடுத்துச் சென்றுள்ளதாகவும், அதற்கு உடந்தையாக மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செயல்பட்டு வருவதாகவும் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பெருமாள் கூறுகையில், தற்சமயம் இப்பகுதிகளில் பல வருடங்களுக்கு பிறகு தொடர் மழை பெய்து கண்மாய்களில் அதிகப்படியான தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இக்கண்மாயில் கிடைக்கும் பாசனத்தை கொண்டு ஏக்கர் கணக்கில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்சமயம் தனிநபர் ஒருவர் மற்றும் அவரின் உறவினர்கள் ஒன்றிணைந்து கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் டிராக்டர் வாகனங்களில் கண்மாய் கரையில் இருந்து அதிகப்படியான மண்ணை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்ற காரணத்தினால் கண்மாய்க்கரை முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கண்மாயில் உள்ள கரையும், தண்ணீரும் ஒன்றாக இருந்து வருவதோடு கண்மாய் உள்ள தண்ணீர் வெளியேறி விவசாயத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய சூழ்நிலை உருவாகி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இடமும், கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், அதன் மீது இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நீர்நிலைப் பகுதிகளில் மணல் அள்ளுவது சட்ட விரோதமான செயல் என்று அரசாணை இருக்கும் பட்சத்தில் ஒரு தனிநபருக்கு அரசுக்கு சொந்தமான கண்மாயில் இருந்து மண் எடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலரே உடந்தையாக இருப்பதோடு, இப்படிப்பட்ட சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கண்டும் காணாமல் மெத்தன போக்காக இருப்பது சமூக ஆர்வலர்களையும், இப்பகுதியில் உள்ள விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே உடனடியாக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது தமிழக அரசும் ,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.