கோயில் விழாவில் அடையாளம் தெரியாத நபர்கள் மஞ்சுவிரட்டு நடத்தியதால் பரபரப்பு
சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. அதில் முக்கிய நிகழ்வாக எருதுகட்டு விழா நடைபெற்றது. இதில் சீரணி அரங்கம் பகுதியில் கோவில் மாடுகள் பூஜைகள் செய்யப்பட்டு வடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த போலீசாரின் வேண்டுகோள் படி கிராமத்தார்கள் மாடுகளை அவிழ்த்து விடாமல் பிடித்துச்சென்றனர்.
இதனிடையே அங்கு வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்து ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மஞ்சுவிரட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையிலான போலீசார் கூட்டத்தை கலைத்தனர். எதிர்பாராமல் நடந்த மஞ்சுவிரட்டால் இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உற்சாகமடைந்தனர். எருதுகட்டில் மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்த்துவிட்ட நபர்களை சிங்கம்புணரி போலீசார் தேடிவருகின்றனர். பள்ளி விடுமுறை காரணத்தால் அதிகமான பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.