20 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பிய கண்மாய்: அருவி போல் வெளியேறும் உபரி நீர்
குற்றாலம், மூணாறு போன்ற பகுதிகளுக்கு வருவதைப்போல சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்
20 ஆண்டு பின்பு நிரம்பிய கண்மாயிலிருந்து அருவி போல் உபரி நீர் வெளியேறுவதை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் சுற்றுலா தளத்தைப் போல குவிந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், ஏரியூர் அருகே கழுங்குப்பட்டியில் உள்ள ஏரிக்கண்மாய் 3 டிஎம்சி தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு, சுமார் 227 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாய்க்கு நீர் வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காழமலை, அழகர்கோவில் மலை, பூதகுடி மலை போன்ற மலைகளில் இருந்து பெய்யும் மழைநீர் ஏரிகண்மாய்க்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் இந்தக்கண்மாய் தண்ணீரை வைத்துதான் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாகத் தடைப்பட்டது
இந்நிலையில், தற்போது வரத்துக் கால்வாய்கள் தூர் வரப்பட்டதால் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, ஏரிக்கண்மாய் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி, கழுங்குகள் வழியாக உபரி நீர் ஆர்ப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக இருந்து வரும் குற்றாலம், மூணாறு போன்ற பகுதிகளுக்கு வருவதைப் போல இதைப்பார்க்க சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்.