சிவகங்கை அருகே கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்: அமைச்சர் தொடக்கம்
இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் அசோலா தீவன உற்பத்தி செய்து இன்னும் கூடுதலாக பால் உற்பத்தியினை பெருக்க முன்வரவேண்டும்;
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆவினிப்பட்டி கிராமத்தில் , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமினை தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆவினிப்பட்டி கிராமத்தில், பால்வளத்துறை, ஆவின் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆகியத் துறைகளின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் தலைமை வகித்தார்.
அமைச்சர் பெரியகருப்பன் முகாமை தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்,கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் அரசால் செயல்படுத் தப்பட்டு வருகிறது. விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையில், கால்நடைகளை பேணிக்காப்பதற்கென திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக பால்வளத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில், நடைபெறும் மூன்றாவது மாபெரும் மருத்துவ முகாமான ஆவினிப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்முகாமில், பல்வேறு வகையான மாட்டினங்களும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும், கோழிகளும் பங்குபெற்றுள்ளது. வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் இம்முகாம்கள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர்கள் அசோலா தீவன உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும். இன்னும் கூடுதலாக பால் உற்பத்தியினை பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன் படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
மேலும், இப்பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக இப்பகுதியில் கூடுதல் மேம்பாட்டு வசதி குறித்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அக்கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக, கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், ஆவினிப்பட்டி கிராமத்திற்க்குட்பட்ட 05 விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையும், பால்வளத்துறையின் சார்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அதிக பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 05 நபர்களுக்கு பாத்திரங்களையும் மற்றும் சிறந்த கிடாரி கன்று வளர்த்த 03 விவசாயிகளுக்கு பரிசு பொருட்களை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சி மற்றும் கால்நடைக்கான முகாமினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.நாகநாதன், துணை பதிவாளர் (பொ) (பால்வளம்) புஷ்பலதா,ஊராட்சி மன்றத்தலைவர் தயாள்நாயகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.ரவி , ஒன்றிய குழு உறுப்பினர் இரா.கலைமாமணி மற்றும் கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.