முல்லைப் பெரியாறு விவகாரம்: திமுக அரசைக்கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்;
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசைக்கண்டித்து சிவகங்கையில் அதிமுகவினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் சிவகங்கை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் சிவகங்கை தொகுதி எம்எல்ஏ-வுமான ஆர்.செந்தில்நாதன் தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்த போது, கடந்த 29 -ஆம் தேதி கேரளா அமைச்சர் ரோசி அகஸ்டின் முன்னிலையில் கேரளாவிற்கு இரண்டு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஆளும் திமுக அரசாங்கம் விட்டுக் கொடுத்து விட்டதாக பிஜேபி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.