சிவகங்கை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
சிவகங்கை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 152 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.;
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் இதுவரை 152 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகளும் நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, கானாடுகாத்தான், கண்டனூர் ,கோட்டையூர், நெற்குப்பை, பள்ளத்தூர், புதுவயல் ,சிங்கம்புனரி, திருபுவனம், திருப்பத்தூர் என 11 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 285 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.
இதில் சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திமுக, அதிமுக , பாஜக, காங்கிரஸ், தேமுதிக, அமமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், எஸ்டிபிஐ கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என இதுவரை 152 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.