முன்விரோதம் காரணமாக அறுவடை இயந்திரத்தைத் தடுத்து நிறுத்திய கிராமத்தினர்
பனிக்கனேந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தடுத்துள்ளனர்
முன்விரோதம் காரணமாக அறுவடை செய்ய வந்த அறுவடை இயந்திரத்தை கிராமத்தினப் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தல் கிராமத்தில் அறுவடைக்கு வந்த இயந்திரத்தை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பனிக்கனேந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இன்று ஒரு தரப்பினர் தங்கள் பகுதியில் விளைந்துள்ள நெற்பயிரை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்துள்ளனர். இதை அறிந்த மற்றொரு தரப்பினர் அவர்களது பகுதியில் முள் செடிகளை போட்டு தடுப்புகளை ஏற்படுத்தினர்.
இதனால் அறுவடை இயந்திரம் வயலுக்கு செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இரு தரப்பினரும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனையடுத்து நாளை மறுநாள் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு அறுவடை செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டு அறுவடை இயந்திரம் திருப்பி அனுப்பப்பட்டது. அறுவடைக்கு தயாரான நெல் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்தது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.