மானாமதுரையில் மணல் திருட்டு: லாரியை கைப்பற்றிய காவல்துறையினர்
மானாமதுரை கால்பிரவு விலக்கில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை காவலர்கள் கைப்பற்றி 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரையில் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் கால் பிரிவு விலக்கு பகுதியில் தோப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த தோப்புகளின் அருகில் செல்லும் வைகை ஆற்றில் மணல் வளம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த தோப்புகளின் வழியாக மணல் கொள்ளையர்கள் லாரிகளை ஆற்றுக்குள் இறங்கி மணலை திருடிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது . சில தோப்புகளின் உரிமையாளர்கள் மணல் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாகவும் செயல்பட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரையில் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களான சங்கர், செல்வராஜ், சாதம்உசேன், அருண்சோலன் ஆகியோர் சென்றபொழுது வைகை ஆற்றுக்குள் மணல் கொள்ளையர்கள் சரக்கு வேனில் ஆட்களை கூட்டி வந்து டிப்பர் லாரிகளில் கடத்துவதற்காக மணலை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது லாரிகளில் மணல் நிரப்பிய ஒரு லாரியை வெளியேற்ற முயன்ற போது லாரி மண்ணில் புதைந்தது. இதனால் லாரியை வெளியே எடுக்க மணல் கொள்ளையர்கள் முயன்றும் முடியாமல் போனதால் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய அந்த டிப்பர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
மேலும் மணல் கொள்ளைக்கு பயன்படுத்த ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வேனும் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த திருட்டில் மணல் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற மண்ணில் புதைந்த அந்த லாரியை ஜேசிபி எந்திரத்தை கொண்டு மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனையும் போலீசார் கைப்பற்றினர். போலீசார் மீட்டுவந்த கடத்தல் லாரி சிவகங்கை பகுதியைச் சேர்ந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த மணல் கடத்தல் சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.