மானாமதுரை- மதுரை இடையே புதிய மின் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் முக்கிய சந்திப்பான மானாமதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் பாதையை ஆய்வு செய்தார்

Update: 2021-12-06 03:45 GMT

மானாமதுரை-மதுரை இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதையில் ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை- மதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  ஆய்வு நடத்தினார்.

மதுரை- ராமேஸ்வரம் இடையே ரயில்பாதை மின் பாதையாக மாற்றும் திட்டத்தில் தற்போது மதுரை- உச்சிப்புளி வரை ரயில் பாதையை மின்மயமாக்கல பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் புறப்பட்டு, கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களில் ரயிலை நிறுத்தி மின் பாதையை ஆய்வு செய்தார்.

அதன்பின் பிற்பகல் 1 .30 மணிக்கு பாதுகாப்பு ஆணையர் வந்த ரயில் மானாமதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் முக்கிய சந்திப்பான மானாமதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் பாதையை ஆய்வு செய்தார். பின்னர் மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் ஏறி மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

மின்சார ரயில் மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் போது என்ஜின் சக்கரங்களில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டது. மானாமதுரை- மதுரை இடையே உள்ள 47 கி.மீ தொலைவுக்கு மின்சார ரயில் பாதையில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் சென்றவாறு பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் ஆய்வு நடத்தினார். அப்போது, மின்பாதை திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்யுமாறு ரயில்வே பொறியாளர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட ரயில்வே தலைமை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்

Tags:    

Similar News